

மேற்கு வங்க அமைச்சர் சுவேந்து அதிகாரி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள42-ல் 18 தொகுதிகளில் பாஜகவெற்றி பெற்றது. இது, ஆளும்திரிணமூல் காங்கிரஸுக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வரும்சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும்முதல்வருமான மம்தா பானர்ஜி ஒப்பந்தம் மேற்கொண்டார்.
அதன்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்; பொதுக்கூட்டங்களில் எப்படி பேச வேண்டும்என்பன போன்ற அறிவுறுத்தல் களை ஐ-பேக் ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். இதனால்,அக்கட்சியின் மூத்த தலைவர்கள்பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி, கடந்த சில மாதங்களாக ஐ பேக் நிறுவனத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். மேலும், கட்சி விவகாரத்தில் முதல்வர் மம்தாவின் மைத்துனர் தலையிடுவதாலும் சுவேந்து அதிகாரி கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர்சுவேந்து அதிகாரி தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர்மம்தா பானர்ஜிக்கும் ஆளுநருக்கும் நேற்று அனுப்பியுள்ளார். இதனிடையே, கட்சியில் இருந்தும் அவர் விலகவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை, கட்சியில் இருந்து அவர்விலகும்பட்சத்தில், அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் அவருடன் விலகுவார்கள் எனக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் விரைவில்சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான சுவேந்து அதிகாரி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறும்போது, “சுவேந்து அதிகாரிகட்சியிலிருந்து விலகவில்லை என நம்புகிறேன். அவரை தொடர்புகொண்டு பேச முயற்சித்து வருகிறோம்” என்றார்.
பாஜகவில் திரிணமூல் எம்எல்ஏ?
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸின் கூச் பிஹார் தொகுதி எம்எல்ஏவான மிஹிர் கோஸ்வாமி அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.