

கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் சைடஸ், பாரத் பயோடெக், சீரம் ஆகிய 3 நிறுவனங்களில் பிரதமர் மோடி நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.
உலகம் முழுவதும் கரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவிட்-19 தடுப்பூசி குறித்த எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கரோனா தடுப்பூசிப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில், கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஏழு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் புனேவில் இயங்கிவரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII), அகமதாபாத்தில் அமைந்துள்ள சைடஸ் கேடிலா (Zydus Cadila) மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, உலக அளவில் பெரும் அளவில் உற்பத்தி மற்றும் விற்பனை உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாகும். கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்புக்காக, உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அகமதாபாத்தில் அமைந்துள்ள சைடஸ் கேடிலா நிறுவனத்தில் தடுப்பூசிக்கான முதல்கட்டப் பரிசோதனை முடிந்துவிட்டதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இரண்டாம்கட்டப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ZyCoV-D என்ற பெயரில் தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல இந்தியாவின் முதல் உள்நாட்டுத் தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கோவாக்சின் என்ற பெயரில் இந்தத் தடுப்பூசி உருவாகி வருகிறது.
இந்தத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் நாளை பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்வதை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்வதோடு, அதன் வெளியீடு, உற்பத்தி மற்றும் விநியோக வழிமுறைகள் பற்றியும் பிரதமர் அறிந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.