

கட்டிட உள் அலங்கார வேலை செய்து வந்த நபர் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் ஒருவர் செய்த பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்த குற்றச்சாட்டில், ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் நவ.4ஆம் தேதி கைது செய்தனர்.
இதற்கிடையே ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் சார்பில் மனுத்தாக்கல் செய்த நிலையில், அதை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகக் கோரி மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்திருந்தது.
இந்நிலையில் இடைக்கால ஜாமீனை 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிபதி சந்திரசூட் அமர்வு கூறும்போது, ''அர்னாபின் மனு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகள் குற்றவியல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றோ, உயர் நீதிமன்றங்களோ, கீழ் நீதிமன்றங்களோ அனுமதிக்கக் கூடாது.
குற்றவியல் சட்டம் குடிமக்களின் மீதான துன்புறுத்தலுக்கான ஆயுதமாக மாறவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். ஒரு நாளாக இருந்தாலும் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவது தவறானது.
மும்பை உயர் நீதிமன்றம் இதுகுறித்து உரிய முடிவெடுக்கும் வரை ஜாமீன் நீட்டிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.