காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்: 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

காஷ்மீரில் அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவம், ஷெல் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்முவைச் சேர்ந்த ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அத்துமீறிக் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LoC) மோட்டார் குண்டுகளை வீசியதில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி தந்தது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரி கூறியதாவது:

"பாகிஸ்தான் ராணுவம் இன்று ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி செக்டரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாயக் பிரேம் பகதூர் காத்ரி மற்றும் ரைபிள்மேன் சுக்பீர் சிங் ஆகியோருக்குப் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் உடனடியாகத் தகுந்த பதிலடி கொடுத்தது.

எல்லைப் பகுதியில் எதிரிகளோடு சண்டையிட்டு உயிரிழந்த ராணுவத்தினர் இருவரின் உயர்ந்த தியாகம் மற்றும் கடமை மீதான அவர்களின் பற்றுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்''.

இவ்வாறு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

வியாழக்கிழமை, பூஞ்ச் மாவட்டத்தின் கிர்னி மற்றும் கஸ்பா செக்டர்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சுபேதர் ஸ்வதந்திர சிங் பலியானார். பொதுமக்களில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in