சட்டவிரோதமாக மீண்டும் தடுப்புக் காவல்: மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

சட்டவிரோதமாக மீண்டும் தடுப்புக் காவல்: மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி மீண்டும் தான் சட்டவிரோதமான முறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.

இந்த அறிவிப்புச் செய்வதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெரும்பாலான தலைவர்கள் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட சூழலில் மெஹபூபா முப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து தடுப்புக் காவலில் இருந்து வந்தார். இதற்கிடையே 14 மாதங்களுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் மாதம் தடுப்புக் காவலில் இருந்து மெஹபூபா முப்தி விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மெஹபூபா முப்தி மீண்டும் தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தனது மகள் இல்திஜாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள அவர், ''நான் மீண்டும் சட்டவிரோதமான முறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இரண்டு நாட்களாக புல்வாமாவில் உள்ள வஹீத் பாராவின் வீட்டுக்குச் செல்ல ஜம்மு, காஷ்மீர் அதிகாரிகள் எனக்கு அனுமதி மறுக்கின்றனர்.

பாஜக அமைச்சர்களும் அவர்களின் கைப்பாவைகளும் காஷ்மீரின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், எனக்கு மட்டும் பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக உள்ளது'' என்று மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வீட்டின் முன்னால் ஆயுதங்கள் தாங்கிய வாகனம் நிற்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணித் தலைவரான வஹீத் பாராவுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி கடந்த புதன்கிழமை அன்று என்ஐஏ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வஹீத் பாராவின் குடும்பத்தினரைக் காணச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மெஹபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in