

குஜராத்தில் கோவிட் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் 5 பேர் பலியானதாக தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராஜ்கோட் நகரின் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ள இச்சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் கரோனா வைரஸ் நோயாளிகள் 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்புப் படை அதிகாரி ஜே.பி.தேவா கூறியதாவது:
''குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில், மவ்தி பகுதியில் உள்ள உதய் சிவானந்த் மருத்துவமனையில் இச்சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.
இம்மருத்துவமனையில் கோவிட் நோயாளிகள் 33 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததை அடுத்து நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து 30 நோயாளிகளை மீட்டோம்.
ஐ.சி.யுவிற்குள் மீட்புப் பணி தொடங்குவதற்கு முன்பாகவே மூன்று நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு விரைவிலேயே இருவர் உயிரிழந்தனர். அதன் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை''.
இவ்வாறு தீயணைப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.
மீட்கப்பட்ட நோயாளிகள் மற்ற கோவிட்-19 மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அகமதாபாத்தில் உள்ள நான்கு மாடி தனியார் மருத்துவமனையின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதில் கோவிட்-19 நோயாளிகள் 8 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.