

ஆந்திராவில் சித்தூர், நெல்லூர்,கடப்பா, குண்டூர், பிரகாசம்ஆகிய 5 மாவட்டங்களை நிவர் புயல் புரட்டிப்போட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் கடந்த2 நாட்களாக பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பின. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
பல கிராமங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் நேற்று காலை முதல் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
திருப்பதி - திருமலை மலைப்பாதையில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்களும் முறிந்தன. இதனால் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகுவாகனப் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில் திருப்பதி நடைவழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று மாலை அறிவித்தது. நடைவழிப் பாதையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்துள்ளன.
எனவே சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு, இப்பாதையை மீண்டும் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தேவஸ் தானம் தெரிவித்துள்ளது.