

தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹபீஸ் சயீதை ரகசியமாக பாகிஸ்தான் அரசு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. புலனாய்வுத் தகவல்கள் மூலம் இது அம்பலமாகி உள்ளது.லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் ஹபீஸ் சயீது. இந்த அமைப்பை ஐ.நா.வும், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளும் தடை செய்துள்ளன. தீவிரவாத பட்டியலில் லஷ்கர் அமைப்பு முக்கிய இடத்தில் உள்ளது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு 10 தீவிரவாதிகள் ஊடுருவி பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதில் 166 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் நேரடியாக சதி திட்டம் தீட்டி கொடுத்தவர் ஹபீஸ் சயீது. இவரை ஒப்படைக்கும்படி இந்தியா தொடர்ந்து பல ஆதாரங்களை அளித்தும் பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில், தீவிரவாதத்துக்கு நிதி அளித்த வழக்கில், சமீபத்தில்தான் சயீதுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்
டனை விதித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீவிரவாதத்துக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் 10 ஆண்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த ஜூலை மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், ஹபீஸ் சயீது சிறையில் அடைக்கப்படுவது போல் சர்வதேச உலகுக்கு காட்டி கொண்டு, பின்னர் அவரை ரகசியமாக பாகிஸ்தான் அரசு விடுவித்தது.
தற்போதும் அவரை சிறையில் இருந்து ரகசியமாக பாகிஸ்தான் அரசு வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது. தற்போது ஹபீஸ் சயீது
சிறையில் இல்லாமல், லாகூரில் உள்ள ஜோஹர் டவுண் பகுதியில் தனது வீட்டில் இருக்கிறார். அத்துடன் லஷ்கர் தீவிரவாத அமைப்
பின் முக்கிய தலைவர்களையும் அவர் வீட்டில் சந்தித்து வருகிறார் என்று இந்திய புலனாய்வுத் துறை அமைப்புகள் கூறியுள்ளன. இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செல்வதைக் கண்காணிக்கும் சர்வதேச நடவடிக்கை அமைப்பு, பாகிஸ்தான் அரசை கடுமையாக எச்சரித்துள்ளது. தற்போது சாம்பல் நிற பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுக்கா
விட்டால், கறுப்பு நிற பட்டியலில் வைக்க போவதாய் அந்த அமைப்பு கெடு விதித்துள்ளது. இதை சமாளிக்கவே ஹபீஸ் சயீதை கைது செய்தது போல் நாடகமாடி, தற்போது அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஹபீஸ் சயீது பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஒரு முறை கூட அவர் சிறையில் நீண்ட காலம் இருந்ததில்லை. இந்நிலையில், முதல் முறை 10 ஆண்டு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது, உலக நாடுகள் ஆச்சரியப்பட்டன. தற்போது 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது, பிரதமர் இம்ரான் கான் அரசு தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் தெரிந்தது. ஆனால், தற்போது ஹபீஸ் சயீது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் கூறின.