

அசாம் மாநிலத்தில் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவ மாணவி ஒருவரை அதே மருத்துவமனையைச் சேர்ந்த வார்டு பாய் கொலை செய்துள்ளார். இதனால் இளநிலை மருத்துவர்கள் வேலைநிறுத்தத் தில் ஈடு பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் (மகளிர் நலம் மற்றும் மகப்பேறு) முதல் ஆண்டு படித்து வந்தவர் டாக்டர் சரிதா தஸ்னிவால். இவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வியாழக்கிழமை இரவுப்பணி பார்த்தார்.
ஆனால் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு டாக்டர்கள் ஓய்வறைக்கு சென்ற செவிலியர்கள், டாக்டர் சரிதா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் காலை 5.30 மணி வரை பணியில் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில், வார்டு உதவியாளர் கிருமெக் மற்றும் 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் டாக்டர் சரிதாவை கத்தியால் குத்தி கொலை செய்ததை கிருமெக் ஒப்புக் கொண்டதையடுத்து கொலை வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி இளநிலை டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சரிதாவை கொலை செய்தவனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஐசியு பிரிவில் சிசிடிவி கேமராவைப் பொருத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கைது செய்யப்பட்ட கிரு மெக், சரிதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டிருக்கலாம் என்றும் அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.