Last Updated : 26 Nov, 2020 03:57 PM

 

Published : 26 Nov 2020 03:57 PM
Last Updated : 26 Nov 2020 03:57 PM

ஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய தேவை: பிரதமர் மோடி பேச்சு

ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல இப்போதைக்கான தேவை இதுவே என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பிரதமர் மோடி நீண்ட காலமாகவே முன்வைத்து வருகிறார். 2014-ல் அவர் முதன்முதலாகப் பிரதமராகப் பதவியேற்றது தொட்டு அவர் இந்த முழக்கத்தை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, "ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல இப்போதைக்கான தேவை இதுவே.

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயார்படுத்த வேண்டும். தனித்தனி பட்டியல் வளங்களை வீணடிக்கும் செயல்.

நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் அவ்வப்போது தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வளர்சிப் பணிகளில் தேர்தல் ஏற்படுத்தும் தாக்கம் அனைவரும் அறிந்ததே.

எனவே, ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தால் அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட நலத்திட்டங்களை மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கச் செய்ய முடியும்.

நமது அரசியல் சாசனத்தில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. அதில் அதி முக்கியமானது, நாம் செய்ய வேண்டிய கடமைகள். அரசியல் சாசனக் கடமைகள் குறித்து காந்தியடிகள் நிறையவே குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது.

நாம் நமது கடமைகளைச் செய்தால் நமது உரிமைகள் தாமாகவே பாதுகாக்கப்படும் என்பது காந்தியின் கூற்று. பழைய சட்டங்களில் காலப்போக்கில் தேவைக்கேற்ப திருத்தம் செய்யப்படுவது எளிமையாக்கப்பட வேண்டும். காலாவதியான சட்டங்களை அகற்றுவது எளிதாக்கப்பட வேண்டும். அரசியல் சாசனம் தேசத்துக்கு கொடுக்கப்பட்ட நாள் முதல் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளன. அரசியல் சாசனத்தைப் போன்று பழைய சட்டங்களை திருத்தம் செய்வதை இயல்பாக்க வேண்டும்" எனப் பேசினார்.

சர்தார் சரோவர் அணை திட்டம் தள்ளிப்போவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, அத்திட்டம் தாமதமாவதற்குக் காரணமானவர்கள் இன்னும் எவ்வித வருத்தமும் இல்லாமல் இருக்கிறார்களே என விமர்சித்தார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தான் இந்தாண்டின் கடைசி தேர்தல். 2021-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், மேற்குவங்க தேர்தல் என இரண்டு முக்கியத் தேர்தல்கள் வருகின்றன. இவை, பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், பிரதமர் தனது ஒரே தேசம்; ஒரே தேர்தல் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் சாசன அறிவை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் புதிய உத்திகளை அதிகாரிகள் கையாள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x