Last Updated : 26 Nov, 2020 02:29 PM

 

Published : 26 Nov 2020 02:29 PM
Last Updated : 26 Nov 2020 02:29 PM

மும்பை தாக்குதல் வடுக்களை இந்தியா ஒருபோதும் மறக்காது; புதிய கொள்கைகளுடன் பயங்கரவாதத்தை தொடர்ந்து எதிர்கொள்கிறோம்: பிரதமர் மோடி

மும்பை தாக்குதல் வடுக்களை இந்தியாவால் மறக்க முடியாது. புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தை எதிர்கொள்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கடந்த 2008, நவம்பர் 26-ல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில், வெளிநாட்டினர் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் உலகையே உலுக்கியது. அதன்பின்னர் இந்தியா பயங்கரவாத தடுப்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், 2008 மும்பை தாக்குதலின் 12-வது நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி காவல் அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாக உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த 2008-ல் இதே நாளில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். வெளிநாட்டவர், நம் குடிமக்கள், காவல் அதிகாரிகள், காவலர்கள் எனப் பலரும் உயிர் துறந்தனர்.

மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது. அந்தத் தாக்குதலின் விளைவு, இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்கிறது.

இன்றளவும் நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாத்து வரும் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்" என்றார்.

முன்னதாக, இன்று காலை தொடங்கி உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு தலைவர்களும் மும்பை தாக்குதலை ஒட்டி சமூக வலைதளங்களில் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அமித் ஷா தனது ட்விட்டரில், "மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்தவர்களை இந்தத் தேசம் என்றும் நினைவுகூரும். அவர்களின் துணிவையும் தியாகத்தையும் போற்றும் " எனப் பதிவிட்டிருந்தார்.

மும்பை தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் ஈடுபட்டனர். அவர்களில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டுமே உயிருடன் சிக்கினார். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு 2012 நவம்பரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x