

கார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவை; விவசாயிகளுக்கு தடியடியா? என்று டெல்லி சலோ போராட்ட அடக்குமுறையைச் சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று (நவம்பர் 26) தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக 'டெல்லி சலோ' பேரணிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன்படி, விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் இன்று டெல்லி சலோ போராட்டத்துக்குத் திரண்டனர். ஆகையால், ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி வருவதை தடுக்க பாதுகாப்பு போடப்பட்டது.
இருப்பினும், தடையை மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு டெல்லி நோக்கிப் புறப்பட்டனர். அம்பாலாவில் திரண்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் மீது தண்ணீரை பீச்சியடித்தும், தடியடி நடத்தியும் அவர்களை போலீஸார் அங்கிருந்து கலைத்தனர்.
இதனை சுட்டிக்காட்டியுள்ள பிரியங்கா காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக கடும் குளிர் காலத்தில் விவசாயிகள் மீது தண்ணீரைப் பாய்ச்சுகிறது பாஜக அரசு. விவசாயிகளிடமிருந்து அனைத்து உரிமைகளையும் அரசு பறித்துக் கொண்டுள்ளது. ஆனால், கார்ப்பரேட்டுகளுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் வங்கி, ரயில்வே, விமான சேவை என அனைத்திலும் பங்குகளை வாரி இரைக்கிறது. கடன் தள்ளுபடி செய்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
டெல்லி சலோ போராட்டத்தைத் தடுக்கும் வகையில் டெல்லி மெட்ரோ சேவை என்சிஆர் பகுதிக்கு மதியம் 2 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லி வரும் ரயிகள் மூன்று ரயில் நிலையங்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்படுகிறது.