

லவ் ஜிகாத்தைத் தடுப்பதற்கான சட்டமுன்வரைவை உ.பி. மாநில அரசு கொண்டுவந்துள்ளது; இதன் நோக்கம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பபது மட்டுமே என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக மட்டுமே கட்டாய மத மாற்றம் செய்பவர்கuள 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கக் கூடிய சட்டத்திற்கான முன்வரைவு மசோதாவை உத்தர பிரதேச அரசு கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி ''இத்தகைய சட்டங்கள் அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 21 ஐ முற்றிலும் மீறக்கூடியது'' என்று கூறினார்.
ஹைதராபாத்திற்கு வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ஊடகங்கள் ஒவைசி கருத்து குறித்து பதிலளிக்குமாறு கேள்வி எழுப்பினர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுகுறித்து கூறியதாவது:
ஒரு மாநில அரசு என்றால், குற்றமாகவும் மோசடியாகவும் பெண்களை திருமணத்திற்கு வற்புறுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை, அரசியலமைப்பின் எல்லைக்குள் நின்றுதான் எடுக்கிறது. பெண்களின் பாதுகாப்பு என்பது சரியானதுதானே.அப்படி இல்லையெனில் நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆதரிக்கிறார்களே, நமது அரசியல் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமலா அவ்வாறு செய்கிறார்கள்.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மீதான மோசடி மற்றும் குற்றவியல் வற்புறுத்தல்கள் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் அரசியலமைப்பின் வரம்பு மீறாமல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் உ.பி.அரசாங்கத்தின் நோக்கம். அதை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.