Published : 08 May 2014 01:06 PM
Last Updated : 08 May 2014 01:06 PM

கூடங்குளம் அணு உலைக்கு தடை விதிக்க முடியாது: எதிர்ப்பு மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்றம் விதித்த 15 நிபந்தனைகள் படிப்படி யாக நிறைவேற்றப்பட்டு வருவதால், கூடங்குளம் அணு உலைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஜி.சுந்தர்ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2013-ல் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணுசக்தி கழகம், எரிசக்தி துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் 15 நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை. இவற்றை அமல்படுத்தாமல் அணு உலையை இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை அளித்த தீர்ப்பு:

இந்த நீதிமன்றம் விதித்த 15 நிபந்தனைகள் குறித்து எதிர்த்தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அணுசக்தி கட்டுப்பாடு வாரியம் அளித்துள்ள அறிக்கையில் அணு உலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஏழு ஆண்டுகளுக்கு அணுஉலை வளாகத்தி லேயே பாதுகாக்கப்பட வேண்டும். எட்டாவது ஆண்டில் இருந்து அணு உலைக்கு வெளியில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கழிவுகளைப் பாதுகாக்க தற்போது போதிய வசதிகள் உள்ளன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முதலாவது, 2-வது அணு உலைக் கழிவுகளை வெளியில் சேகரிக்க தேவையான வசதிகளை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப் படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு, அணு உலை வளாகத்தில் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரிய நிபந்தனைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டு அறிக்கை அளித்துள்ளது. கடல் நீரின் இயற்கையான வெப்பநிலையைவிட கூடுதலாக 7 டிகிரி வரை வெளியேற்றப்படும் நீர் இருக்கலாம். அதை தாண்டக் கூடாது என்ற நிபந்தனையை மாசுக் கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ளது. இதற்காக அணு உலை வளாகத்தில் வெப்பத்தை அளக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அணு உலையைச் சுற்றி நடத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஆபத்துகால பயிற்சி குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளார். மொத்தம் ரூ.200 கோடியில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில், முதல்கட்டமாக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. செட்டிகுளம் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் முடியும் நிலையில் உள்ளது. உவரி புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி முடிந்துள்ளது. இந்த ஆண்டு 5,000 புதிய வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன.

போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட 349 வழக்குகளில், 248 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. கடல் வழியாக முற்றுகையிட்ட வழக்கு - 6, தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியது - 40, அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது - 55 ஆகிய வழக்குகளை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப் பட்டுள்ளன. தவறு ஏதும் நடக்கவில்லை. அனைத்து நிபந்தனைகளையும் அமல்படுத்த சிறிது காலம் தேவை. எனவே, குழு எதுவும் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கத் தேவையில்லை. அணு உலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x