

முழு தென்னிந்தியாவும் காவிமயமாகும் என்று ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக எம்.பி.யும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (இளைஞர் பிரிவு) தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் மாநகராட் சிக்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக இடையில்தான் கடும்போட்டி நிலவுகிறது. ஹைதராபாத்தில் முஸ்லிம் வாக்குகளும் அதிகம் உள்ளதால், ஒவைசி யின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் களத்தில் உள்ளது.
நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் தேஜஸ்வி சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:
முதல்வர் சந்திரசேகர ராவ், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தை கோல்டன் தெலுங்கானாவாக மாற்றிக்காட்டுவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அவருடைய கட்சியினருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே தங்கம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் மாநில இளைஞர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
மாநில தலைநகராக உள்ள ஹைதராபாத் நகரை வளர்ச்சி அடைய செய்வேன் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். முதல்வர் சொன்னபடி எதையும் நிறைவேற்றவில்லை. ஹைதராபாத் ஒரு சிறந்த நகரம், அதற்கு ஒரு புதியவகையிலான கண்ணோட்டமும் ஆட்சியும் தேவை, இதனை பாஜக தலைமை மட்டுமே கொடுக்க முடியும்.
முதல்வர் சந்திரசேகர ராவ், குடும்ப ஆட்சியை ஊக்குவித்து வருகிறார். பல போராட்டங்கள் மற்றும் தியாகங்களைத் தொடர்ந்து தெலுங்கானா உருவாக்கப்பட்டது, அது ஒரு குடும்பத்தின் சொத்து அல்ல.
பாஜகவில் தான் ஒரு எளிய குடும்பத்தில் இருந்து வரும் ஒரு சாதாரண தொண்டர்கூட கட்சியின் தேசியத் தலைவராக உயர முடியும்.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றியடையும். தென்னிந்தியாவில் இது ஒரு ஆரம்பம் தான். அதனைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம், நாங்கள் தமிழகத்தையும் வெல்வோம், நாங்கள் கேரளாவில் வெல்வோம், தென்னிந்தியா முழுவதும் காவிமயமாக்கப்படும்.
இவ்வாறு பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.