

தருண் கோகோய் என்னை சொந்த மகனை போல நடத்தினார், அவரது மறைவு எனக்கு பேரிழப்பு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகோய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனாவுக்குப் பிந்தைய தாக்கத்தால் அவருடைய நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளிலும் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
தொடர்ந்து உடல்நிலையில் பின்னடைவு நிலவியது. இதனால், கடந்த 21-ம் தேதி உயிர் காக்கும் செயற்கை சுவாசக் கருவியில் தருண் கோகோய் வைக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு சிகிச்சையை மீறியும் கரோனா ஏற்படுத்திச் சென்ற பாதிப்பால் அவருடைய பல்வேறு உறுப்புகளும் செயலிழந்தன. தருண் கோகோய் நேற்று முன்தினம் மாலை காலமானார்.
அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று குவஹாத்தி சென்றார். அங்கு தருண் கோயோய் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
தருண் கோகோய் என்னை சொந்த மகனைப் போல நடத்தினார், அவரது மறைவு எனக்கு பேரிழப்பு. இது ஒரு சோகமான நாள். காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார். சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கினார். இன்று அகமது படேல் மரணமடைந்துள்ளார். அடுத்தடுத்து 2 தலைவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டனர்.’’ எனக் கூறினார்.