

முத்தலாக் தடை கொண்டு வந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள முஸ்லிம் பெண், கேரள பஞ்சாயத்து தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் டி.பி.சுல்பத். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் வண்டூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட எமான்கட் வார்டு தேர்தலில் போட்டியிட பாஜக வேட்பாளராகக் களம் இறங்கி இருக்கிறார். இதற்கான வேட்புமனுதாக்கல் செய்த பின்னர், சுல்பத்துக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
மலப்புரத்தில் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) மிகவும்செல்வாக்குடன் உள்ளது. அத்துடன், பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் சுல்பத். இத்தனைக்கும் ஐயுஎம்எல் கட்சிக்கு சுல்பத்தின் குடும்பத்தினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
முத்தலாக் தடையால் மகிழ்ச்சி
அப்படி இருக்கும் நிலையில் எப்படி பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமுடன்உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் ஒரே பதிலைதான் சுல்பத் கூறி வருகிறார். ‘‘நாட்டில் முத்தலாக் நடைமுறைக்கு மத்திய அரசு தடை கொண்டு வந்தது. அத்துடன், பெண்களின் திருமண வயதை உயர்த்த பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இந்தக் காரணங்களால் பெண்களின் வாழ்க்கை மேம்படும்’’ என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்து வருகிறார் சுல்பத்.
மலப்புரம் மாவட்டத்தில் ஐயுஎம்எல் மிகவும் செல்வாக்குடன் இருப்பதால், இங்கு முஸ்லிம்பெண்கள் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்று சுல்பத்துக்கு தெரிய வந்தது. மேலும், வண்டூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட எமான்கட் வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இதை அறிந்த சுல்பத் மறு சிந்தனை இல்லாமல், பாஜக சார்பில்போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சுல்பத் கூறும்போது, ‘‘எனக்கு திருமணம் ஆகும்போது 15 வயது. அப்போது 10-ம்வகுப்புதான் முடித்திருந்தேன். இளம் வயதில் திருமணமான பெண்கள் என்னைப் போலவே பிரச்சினைகளைச் சந்தித்ததை நான் அறிவேன். அப்போதுதான், பெண்களின் திருமண வயதை உயர்த்த பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதை அறிந்தேன். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்’’ என்றார்.
முஸ்லிம் ஆண்கள் பலர் பாஜக சார்பில் போட்டியிட்டாலும், பெண்களில் 2 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். சுல்பத் மட்டுமன்றி வார்டு தேர்தலில் இன்னொரு முஸ்லிம் பெண் ஆயிஷாஉசைன் என்பவர் பாஜக சார்பில்போட்டியிடுகிறார்.
ஆயிஷாவின் கணவர் உசைன்,பாஜக.வின் சிறுபான்மையினத்தவர் மோர்ச்சாவில் துடிப்பான உறுப்பினராக இருக்கிறார். மலப்புரம் மாவட்டம் எடரிகோட் பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். தற்போது கணவரின் முழு ஆதரவுடன் ஆயிஷாவும் தேர்தல் களத்துக்கு வந்துள்ளார்.