

கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் ‘லவ் ஜிஹாத்‘துக்கு எதிரான அவசர சட்டத்துக்கு உபி. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முஸ்லிம் ஆண்கள் இந்துப் பெண்களை ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் காதல் வலையில் விழவைத்து அவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதாக உத்தரபிரதேசம், மத்திய பிர தேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. காதலின் பெயரால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே அறிவித்தார். இது தொடர்பாக அவசர சட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். அதன்படி, மாநில சட்டக் கமிஷன் புதிய மசோதா தயாரித்து அரசுக்கு அனுப்பியது.
இதன் அடிப்படையில் மாநில அரசு கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் லவ் ஜிஹாத்துக்கு எதிரான அவசர சட்டத்தை கொண்டு வருகிறது. இந்த அவசர சட்டத்துக்கு உ.பி. அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதன்படி, பெண்களை கட்டா யமாக மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் லவ் ஜிஹாத்தில் ஈடுபடும் ஆண்கள் சட்டப்படி தண்டனைக்குள்ளாவர். இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதா விரைவில் கூட உள்ளஉ.பி. சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல்செய்யப்பட்டு மசோதா நிறை வேறியபின் முறைப்படி சட்ட மாக்கப்படும்.