

விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த 40 ஆயிரம் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் இணையமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண் தெரிவித்துள்ளார்.
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலை சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
பருவமழை போதிய அளவு பெய்யாததால் தானியங்களின் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் பருப்பு வியாபாரிகளும் இடைத் தரகர்களும் தானியங்களை குடோன் களில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கின்றனர். இதைத் தடுக்க விவசாயிகளிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் விவசாயி களிடம் இருந்து சந்தை விலையில் பருப்பு வகைகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் இணையமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண் டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பருவமழை பொய்த்ததால் பருப்பு விளைச்சல் குறைந்துள்ளது. இதை சில வியாபாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
எனவே விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக 40 ஆயிரம் டன் பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே 5 ஆயிரம் டன் பருப்பு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 2 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப் படும். இதன் மூலம் விலைஉயர்வு கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.