

கரோனா வைரஸ் சவால்களை நாம் சேர்ந்தே எதிர்கொள்வோம் என பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களிடம் வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசிகளைப் பாதுகாக்க குளிர் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா நிலவரம் குறித்து டெல்லி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், கேரளா, ராஜஸ்தான், உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது பல்வேறு மாநில முதல்வர்களும் தத்தம் மாநிலத்தின் கரோனா நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர், பேசிய பிரதமர் மோடி, "இன்று நான் மாநில முதல்வர்களுடன் கரோனா நிலவரம் குறித்து ஆலோசித்தேன். குறிப்பாக எந்தெந்த மாநிலங்களில் தொற்று நிலவரம் சர்ச்சையாகியிருக்கிறதோ அந்த மாநில முதல்வர்களுடன் ஆலோசித்தேன். தடுப்பூசி பயன்பாடு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முதல்வர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. நோயிலிருந்து மீண்டு வருவோர், நோய்க்கு பலியாவோர் இறப்பு விகிதங்களில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா நிச்சயமாக நல்ல நிலையில் இருக்கிறது. மத்திய - மாநில அரசுகள் இணைந்து ஒத்துழைத்து மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குக் கிடைத்த பலன் இது.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் நமக்கு நம்பத்தகுந்த அறிவியல் தரவுகள் உள்ளன. அதன் அடிப்படையில் இப்போதைக்கு தொற்று ஏற்படும் எண்ணிக்கையை 5%-க்கும் கீழ் கொண்டு வர வேண்டும். அதேபோல் கரோனா இறப்பு விகிதத்தையும் 1%-க்கு கீழ் கொண்டுவர வேண்டும்.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் அதிகரிக்க வேண்டும். தனிமைப்படுத்துதலின் இருப்போர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
தடுப்பூசிகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது பற்றியும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. விரைவாக தடுப்பூசியைக் கொண்டுவர வேண்டும் என்ற அதேவேளையில் பாதுகாப்பும் அவசியமானது.
இந்திய மக்களுக்கு வழங்கப்படும் கரோனா தடுப்பூசி அறிவியல் ரீதியாக மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். அடுத்தகட்டமாக, மாநில அரசுகள் குளிர் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசிகளைப் பாதுகாக்க ஏதுவாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
தடுப்பூசிகள் எப்போது நம் கைகளில் கிடைக்கும் எனத் தெரியாது. ஆனால், தடுப்பூசி கிடைத்தபின்னர் முதலில் முன்கள மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். பின்னர் காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும், அதன் பின்னர் 50-வயதுக்கு மேற்பட்டோருக்கும், தொடர்ந்து இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் வழங்கப்படும். பின்னர் அனைவரின் பயன்பாட்டுக்கும் சந்தைக்கு வரும்.
சிலர் தடுப்பூசி விவகாரத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இது அரசியல் செய்வதற்கான தருணமில்லை" என்றார்.