

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தாருடன் இன்று காலை 11 மணிக்குத் திருப்பதி வந்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தாருடன் இன்று (நவ. 24) காலை தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தன், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பலத்த வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அங்கிருந்து மிகுந்த பாதுகாப்புடன் காரில் திருச்சானூர் சென்ற குடியரசுத் தலைவர், அங்கு பத்மாவதி தாயாரை வழிபட்டார். கோயிலில் குடியரசுத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் காரில் திருமலைக்குச் சென்றார். அங்கு அவரை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலுக்குச் சென்ற குடியரசுத் தலைவர், சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற குடியரசுத் தலைவருக்கு முகப்பு கோபுரம் அருகே பூரண கும்ப மரியாதையுடன் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஏழுமலையானை தரிசித்த குடியரசுத் தலைவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
பின்னர் மீண்டும் பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார் குடியரசுத் தலைவர். இன்று மாலை 4 மணி அளவில் அவர் திருமலையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் செல்கிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி திருச்சானூர், திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் இரண்டரை மணி நேரம் பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசங்கள், கையுறைகள் அணிந்து கிருமிநாசினியை அடிக்கடி கைகளில் தெளித்துக்கொண்டு முழுமையாக கரோனா நிபந்தனைகளை அதிகாரிகள் பின்பற்றினர்.