Published : 24 Nov 2020 03:13 am

Updated : 24 Nov 2020 07:14 am

 

Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 07:14 AM

செல்போனில் வாக்களிக்கும் நுட்பத்தை கண்டுபிடித்த கேரள இளைஞர்: தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருப்பு

cell-phone-vote
செல்போன் மூலம் வாக்களிப்பது குறித்து விளக்கும் ரிஷிகேஷ்.

திருவனந்தபுரம்

கரோனா கால சூழலுக்கு ஏற்றவாறு செல்போன் மூலம் வாக்களிக்கும் நுட்பத்தை கேரளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். சமூக இடைவெளி பிரதானமாகி இருக்கும் இன்றைய சூழலில் இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சாதாரண காலங்களிலேயே நூறு சதவிகித வாக்குப்பதிவை எட்ட தேர்தல் ஆணையம் பல கட்ட விழிப்புணர்வில் ஈடுபடுவது வழக்கம். இந்த கரோனா காலத்தில் அச்சமின்றி வாக்களிக்க மக்கள் வருவார்களா என்பது மிகப்பெரிய சந்தேகமாக இருக்கிறது. இப்படியான சூழலில் கேரளத்தின் ஆழப்புழா மாவட்டத்தின், முஹம்மா பகுதியைச் சேர்ந்த சி.எஸ்.ரிஷிகேஷ் உலகின் எந்த மூலையில் இருந்தும் தன் செல்போன் மூலம் வாக்களிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.


திருவனந்தபுரத்தில், கேரள மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்பு இதுதொடர்பாக செயல்முறை விளக்கமும் காட்டியிருக்கிறார். இப்படியான சூழலில் இந்து தமிழ் இணையதளத்துக்காக செய்தியாளர் சந்தித்த போது ரிஷிகேஷ் கூறியதாவது:

பிரதமர் மோடி, மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பேசும்போது இந்த கரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது மிக சவாலானது என்று குறிப்பிட்டார். அதைக் கேட்டதும் எனக்கு இது தொடர்பாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என உந்துதல் ஏற்பட்டது. நான் ஏற்கெனவே இருபதுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நான் முறைப்படி படித்து பட்டம் பெற்ற விஞ்ஞானி அல்ல.

நான் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். அதன் பின்னர் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் எனக்கு எலக்ட்ரானிக் பாடத்திட்டத்தை அனுப்பி வைத்தார்கள். வீட்டில் இருந்து நான் அதை படித்தேன். கூடவே என் அனுபவப் பாடமும் பெரிதும் கைகொடுத்தது. 2002-ல் ஒரு படகு கவிழ்ந்ததைப் பார்த்தேன். அப்போது நீர்மட்டத்தைத் தீர்மானிக்கும் சென்சார் கருவியை கண்டுபிடித்தேன். 2012-ல் முல்லைப் பெரியாறில் உடைப்பு ஏற்படும் என்று கேரளத்தில் தகவல் பரவியது. இதுபோன்ற நேரங்களில் அரசு சிவப்பு எச்சரிக்கை விட்டால்தான் மக்களுக்கு ஆபத்தின் தீவிரம் தெரியும். அந்த நேரத்தில் பேரிடர்களை சாமானியர்களும் முன்கூட்டியே கண்காணிக்கும் அதிர்வு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்தேன்.

இப்படியான தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளை முன்னிறுத்தி கடந்த 2015-ல் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் ‘ராஷ்டிரபதி விருது’ பெற்றேன். இது கல்வியறிவு இல்லாமல் தன் சுயமூளையை பயன்படுத்தும் எளிய கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது. இந்திய தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் இந்த விருது கிடைத்ததும் இன்னும் உற்சாகமாக கண்டுபிடிப்புப் பணிகளில் ஈடுபட்டேன். அந்த வகையில்தான் இந்த கரோனா காலத்தில் தேர்தலுக்கு பயன்படும் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினேன். இதற்கு எனக்கு முழுதாக மூன்று மாதங்கள் ஆயின.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் நான் கண்டுபிடித்திருக்கும் சாதனம் இணைப்பில் இருக்கும். இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தில் ஒரு செல்போன் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். அந்த எண்ணில் இருந்து மட்டுமே வாக்காளர் வாக்களிக்க முடியும். வாக்களிப்பதற்கு பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து அந்த பகுதிக்கான தேர்தல் அதிகாரியின் எண்ணுக்கு போன் செய்ய வேண்டும். அவர் அனுமதித்தால் மட்டுமே செல்போன் மூலம் வாக்களிக்க முடியும். அனுமதி தொடர்பான பட்டனை அதிகாரி அழுத்தியதும், வாக்காளர் தன் மொபைல் போனிலேயே வாக்களிக்க முடியும். ஒரு முறை வாக்களித்துவிட்டால் அதை மாற்றி மீண்டும் ஓட்டு போட முடியாது. செல்போனில் வாக்களித்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கேட்பது போல் பீப் சத்தமும் கேட்கும்.

இவ்வாறு ரிஷிகேஷ் கூறினார்.

இதுகுறித்து கேரள மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆழப்புழா தொகுதியின் எம்.பி. ஆரிப் மூலம் ரிஷிகேஷ் எங்களைத் தொடர்பு கொண்டார். உண்மையில் அவரது கண்டுபிடிப்பு அற்புதமானது. இந்த கரோனா காலத்துக்கானதாக மட்டும் கொள்ளாமல் இயல்பாகவே வயோதிகர்கள், உடல்நலம் குன்றியவர்கள், வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க முடியவில்லையே என சிரமப்படுபவர்களுக்கு இது நல்ல பலனாக இருக்கும். ஆனால் ரிஷிகேஷின் கண்டுபிடிப்பில் 9 வேட்பாளர்கள் வரை மட்டுமே இருந்தால்தான் இந்த சேவையை பயன்படுத்த முடியும். செல்போனில் 9 வரையான தனித்தனி பொத்தான்களே இருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.

அதேநேரத்தில் ஒரு தொகுதிக்குள் 9 வேட்பாளர்களுக்குள்தான் போட்டியிட்டால் இது நல்ல பலனைக் கொடுக்கும். வாக்களிப்பவர்களின் சதவிகிதத்தையும் இது கணிசமாக உயர்த்தும். இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு இந்த சாதனம் தொடர்பாக ரிஷிகேஷ் செயல்முறை விளக்கம் அளிக்க பரிந்துரைத்துள்ளோம். இந்த கரோனா காலத்தில் தேர்தல் களத்தில் வாக்களிக்கும் முறையும் நவீன மயமாக வேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.


Cell phone voteகேரள இளைஞர்தேர்தல் ஆணையம்செல்போனில் வாக்களிக்கும் நுட்பம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x