

ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் மாதம் முதல் வீடுகளுக்கு தண்ணீர் வரி ரத்து செய்யப்படும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உறுதி கூறினார்.
ஹைதராபாத் மாநகராட் சிக்கு வரும் டிசம்பர் 1-ம் தேதிதேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக இடையில்தான் கடும்போட்டி நிலவுகிறது. ஹைதரா பாத்தில் முஸ்லிம் வாக்குகளும் அதிகம் உள்ளதால், ஒவைசி யின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் களத்தில் உள்ளது.
இந்நிலையில் டிஆர்எஸ் கட்சி சார்பில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:
வரும் டிசம்பர் முதல் ஹைதராபாத்தில் 20 ஆயிரம்லிட்டர் வரை தண்ணீர் உபயோகிக்கும் வீடுகளுக்கு தண்ணீர் வரி ரத்து செய்யப்படும். இதன் மூலம் நகரில் 97 சதவீத மக்கள் பலன் அடைவார்கள். மூசி நதியை கோதாவரி நதியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசுப் பேருந்துகள் மற்றும் அரசு வாகனங்கள் பேட்டரியில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் சலவைத் தொழிலாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். கரோனா காலத்தில் வாகன வரி ரத்து செய்யப்படும். ரூ.10 கோடிக்குள் எடுக்கப்படும் திரைப்படத்துக்கு மாநிலஜிஎஸ்டி வரி திரும்ப வழங்கப்படும். ஆளும் கட்சிக்கு வாக்களித்தால்தான் ஹைதராபாத் நகரம் முழு வளர்ச்சி பெறும். இதனை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு கே.சந்திரசேகர ராவ் பேசினார்.