Last Updated : 23 Nov, 2020 05:06 PM

 

Published : 23 Nov 2020 05:06 PM
Last Updated : 23 Nov 2020 05:06 PM

பிஹாரில் உருது மொழியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட எம்எல்ஏ; இந்துஸ்தான் என்ற வார்த்தையை பாரத் என மாற்றக் கோரியதால் சர்ச்சை

பிஹாரின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி எம்எல்ஏ அக்தருல் இமான்.

பாட்னா

பிஹாரில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஒவைசி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் உருது மொழியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். மேலும், இந்துஸ்தான் என்ற சொல்லுக்குப் பதிலாக பாரத் என்று அவர் உச்சரித்தது சர்ச்சையை உண்டாக்கியது.

அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி (ஏஐஎம்ஐஎம்), தேர்தலில் போட்டியிட்ட மற்ற கட்சிகளிடையே பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்கட்சியின் பிஹார் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் உருது மொழியில் சத்தியப் பிரமாணம் செய்ய எழுந்தவுடன், இந்துஸ்தான் என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனால் திகைத்துப்போன சபாநாயகர் ஜிதன் ராம் மஞ்சி, ''மரபுப்படி உருது மொழியில் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டாலும் இந்துஸ்தான் என்றுதான் கூறவேண்டும்'' என்பதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், சபாநாயகர் அவரை பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்த அனுமதித்தார். பின்னர் இது சர்ச்சையை உருவாக்கியது.

இதுகுறித்துப் பேசிய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவுமான மதன் சாஹ்னி கூறுகையில், "இந்துஸ்தான் என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல். ஆனால் சிலர் வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் வகையில் தேவையற்ற சர்ச்சையை உருவாக்குகிறார்கள்" என்றார்.

அக்தருல் இமான் நிலைப்பாடு குறித்து பாஜக எம்எல்ஏ நீரஜ் சிங் பாப்லு சற்றே ஆவேசமடைந்தார். அவர் "இந்துஸ்தானை உச்சரிப்பதில் சிக்கல் உள்ளவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர்கள், ''தேசபக்திமிக்க சிறுபான்மையினரின் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் தாங்கள் இந்துஸ்தான் என்ற வார்த்தைக்கு ஏன் ஆட்சேபனை தெரிவிக்கிறீர்கள்? அது பொதுவான மக்களால் நாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தைதானே'' என்று கேட்டனர்.

இப்பிரச்சினை குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்து எம்எல்ஏ அக்தருல் இமான் கூறியதாவது:

"நான் எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை. அரசியலமைப்பின் முன்னுரையை எந்த மொழியில் படித்தாலும், அது எந்த மொழியில் இருந்தாலும், அது பாரத் என்ற வார்த்தையைத்தான் குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் பெயரில் நாங்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறோம் என்பதால், அதே வார்த்தையை நம் நாட்டின் பெயராகவும் பயன்படுத்தினால் அது சரியானதாக இருக்கும் என்று தோன்றியது.

இக்பாலின் புகழ்பெற்ற கவிதை "சாரே ஜஹான் சே ஆச்சா, இந்துஸ்தான் ஹமாரா" பாடலை மனப்பாடம் செய்து வளர்ந்தவன் நான். அப்படியிருக்க இந்துஸ்தான் என்ற வார்த்தையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணம் செய்ய விரும்பிய காங்கிரஸ் எம்எல்ஏ ஷகில் அகமது கான் போன்ற தலைவர்களின் தனிப்பட்ட விருப்பத்தையும் பாராட்டுகிறேன்.

இந்துஸ்தான் என்ற வார்த்தைக்குப் பதில் பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்ற என்னுடைய இந்த நிலைப்பாடு உருது மொழி பேசும் மக்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. அப்படிப் பாதிக்கும் என்று சொன்னால் அது சமஸ்கிருதமயமாக்கலில் ஈடுபாடு கொண்ட இந்து பெரும்பான்மையின் ஒரு கூற்றாகத்தான் இருக்கும்''.

இவ்வாறு ஒவைசி கட்சி எம்எல்ஏ அக்தருல் இமான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x