

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதியான பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிகிச்சைக்குச் செல்லும்போது பேரறிவாளனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ அரசு பரிந்துரையை ஏற்று தன்னை சிறையிலிருந்த விடுவிக்கக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று (திங்கள் கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், பேரறிவாளன் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் அவரது பரோல் நீட்டிக்க உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடுமாறு கோரினார்.
இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் இன்னும் ஒரு பரோலை நீட்டிக்க உத்தரவிட்டது. மேலும், சிகிச்சைக்கு செல்லும்போது பேரறிவாளனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறது.
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் அந்த பரிந்துரை மீது முடிவெடுக்காமல் தமிழக ஆளுநர் இரண்டாண்டு காலம் தாமதம் காட்டிவருவது வருத்தமளிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சிறுநீரகத் தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 9-ம் தேதி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. நவம்பர் 9-ல் பரோல் முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாட்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றுடன் (நவ.23) பரோல் முடிவடையும் நிலையில், 3-வது முறையாக பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.