Last Updated : 23 Nov, 2020 12:12 PM

 

Published : 23 Nov 2020 12:12 PM
Last Updated : 23 Nov 2020 12:12 PM

நிலைமை இன்னும் மோசமாகலாம்.. டெல்லி, குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களிடம் கரோனா நிலவர அறிக்கை கோரியது உச்ச நீதிமன்றம்

டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் கரோனா நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது. மேலும், வரும் மாதங்களில் இந்தியாவில் கரோனா தொற்று நிலவரம் மேலும் மோசமாகலாம் என உச்ச நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமையைக் கருதி, கரோனா முன்னெச்சரிக்கை வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.பி.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்ததையொட்டி நீதிபதிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் நடப்பு (நவம்பர்) மாதத்தில் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் கரோனா தொற்று நிலவரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடுகிறோம். கரோனா தடுப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் டிசம்பர் மாதத்தில் தொற்று பரவல் இன்னும் மோசமாகலாம்.

கரோனா தொற்று பரவலில் டெல்லி நிலவரம் வருத்தமளிப்பதாக இருக்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

இவ்வாறு நீதிபதிகள் கோரினர்.

அப்போது, மத்திய அரசு தர்ப்பில் ஆஜரான சாலிசிட்டர் ஜெனரல், உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நிறைய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இருப்பினும் டெல்லி அரசு நிறைய சிக்கல்களுக்கு இன்னும் முறையாக விளக்கமளிக்கவில்லை என மாநில அரசை குறைகூறும் விதமாக பதிலளித்தார்.

டெல்லியைத் தொடர்ந்து நீதிபதிகள் குஜராத் மாநிலத்தையும் சாடினர். குஜராத்தில் எடுக்கப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வினவினர்.

இந்த வழக்கை நவம்பர் 27-க்கு ஒத்திவைத்தனர்.

அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா போன்ற நகரங்களில் இரவு முழுமுடக்கம் மீண்டும் அமலாகியுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இதியாவில் இன்றைய நிலவரப்படி இதுவரை 91.39 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. 1.33 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x