

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை தொடர்பான வழக்கை, காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் நகர் கிளையில் இருந்து ஜம்மு கிளை நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.
ஜம்மு காஷ்மீரில் பசுவதை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு ஜம்மு உயர் நீதிமன்ற கிளை தடை விதித்தது. இந்த தடையை கடுமையாக அமல்படுத்தும்படி போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாட்டி றைச்சி விற்பனைக்குள்ள தடையை ஏன் நீக்க கூடாது என்று கேள்வி கேட்டு மாநில அரசுக்கு நகர் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் 2 கிளைகளும் மாறுபட்ட உத்தரவு வழங்கியதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 2 மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மேலும், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும்படியும் உத்தரவிட்டது.
அதன்படி, ஜம்மு காஷ்மீர் நகர் உயர் நீதிமன்ற கிளையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இந்நிலையில், நகர் கிளையில் விசாரணை நடந்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச் சினை ஏற்படும்.
எனவே, வழக்கை ஜம்மு கிளைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி, பரிமோக் ஷ் சேத் என்பவர் சார்பில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்தது.
பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நான் நேற்றிரவு பேசினேன். ‘இந்த வழக்கை விசாரித்தால் பிரச்சினை ஏற்படும் என்று நான் கருதவில்லை’ என்று அப்போது அவர் என்னிடம் தெரி வித்தார் என்றார். எனவே, மனுவை விசாரிக்க முடியாது’’ என்று மறுத்துவிட்டார்.
அப்போது மனுதாரர் பரி மோக் ஷ் சேத் கூறும்போது, “இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், ஒருவேளை உயர் நீதிமன்றத்தில் என் மனு மீது எதிரான தீர்ப்பு வெளியானால், மீண்டும் புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண் டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். அதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.