Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

மலபார் கூட்டு போர் பயிற்சி வெற்றி: இந்திய கடற்படை கருத்து

புதுடெல்லி

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து ஆண்டுதோறும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு `மலபார்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முதல்முறையாக ஆஸ்திரேலியாவும் `மலபார்' போர் பயிற்சியில் இணைந்து கொண்டது.

முதல்கட்டமாக வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே கடந்த 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை `மலபார்' போர் பயிற்சி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கடந்த 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அரபிக் கடலில் `மலபார்' போர் ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்திய கடற்படையின் விமானந்தாங்கி போர்க்கப்பலான விக்கிரமாதித்யா, அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் உள்ளிட்டவை போர் பயிற்சியில் பங்கேற்றன.

இதுகுறித்து இந்திய கடற்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதி கிருஷ்ண சுவாமிநாதன் கூறியதாவது:

இந்த ஆண்டு `மலபார்' போர் பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதல் காரணம், 2 கட்டங்களாக போர் பயிற்சி நடத்தப்பட்டது. இதன்படி வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் நட்பு நாடுகளுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டோம்.

இரண்டாவது காரணம், இந்தியா உட்பட 4 நாடுகள் முதல்முறையாக போர் பயிற்சியில் பங்கேற்றன. நான்கு நாடுகளின் கடற்படைகளும் ஒன்றாக இணைந்து அபாரமாக, வெற்றிகரமாக போர் ஒத்திகையை நடத்தினோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து `குவாட்' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. முதல்முறையாக `குவாட்' அமைப்பின் 4 நாடுகளும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x