

நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகி வருவதை எதிர்க்கும் வகையில், டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் அமைதிப் போராட்டப் பேரணி நடத்தினர்.
தங்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டியிருந்த அவர்கள், மண்டி ஹவுஸ் அருகே ஸ்ரீராம் மையத்தில் இருந்து சாகித்ய அகாடமி தலைமையகம் வரை பேரணியாகச் சென்றனர். இந்த அமைதிப் போராட்டப் பேரணியில், நாடு முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் முதியவர் படுகொலை, எழுத்தாளர் சுசீந்திர குல்கர்னி, காஷ்மீர் எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் மீது இந்துத்துவா அமைப்பினரின் தாக்குதல்கள் என தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகி, பன்முகத் தன்மைக்கு எதிராகவும், எழுத்தாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் நடைபெறும் சம்பவங்களைக் கண்டித்தும் படைப்பாளிகள் பலரும் தங்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்தனர். அகாடமியின் நிர்வாகிகளில் சிலர் பதவி விலகினர். இதனால் சாகித்ய அகாடமி நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சாகித்ய அகாடமியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ள நிலையில், எழுத்தாளர்களின் இந்த அமைதிப் பேரணி கவனத்தை ஈர்த்துள்ளது.
"இந்த நாட்டில் கருத்து சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் நசுக்கப்பட்டு வருகிறது. இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களால் சிறுபான்மையினரும் தலித் சமூகத்தினரும் பாதுகாப்பற்றச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற எழுத்தாளர் ஒருவர் கூறினார்.
மேலும், "நாட்டில் மலிந்துவரும் மதச்சார்பு நடவடிக்கைகளை ஒடுக்கும் விதமாக, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கோள்ள வேண்டும். எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சாகித்ய அகாடமி அமைப்பு கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்" என்றார் அவர்.
இதனிடையே, கல்புர்கி படுகொலை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சாகித்ய அகாடமியை தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.