

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழாவின் இறுதி நாளான இன்று ‘ஜம்போ சவாரி' என அழைக்கப்படும் யானை ஊர்வலம் கோலாகலமாக நடைபெறுகிறது. மேலும் கர்நாடக பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவதால் லட்சக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர்.
கடந்த 1610-ம் ஆண்டு மைசூரு வில் உடையார் சாம்ராஜ்ஜிய மன்னர்களால் தொடங்கப்பட்ட தசரா திருவிழா ஆண்டு தோறும் 11 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டா டப்படுகிறது. நடப்பாண்டு விழாவை கடந்த 13-ம் தேதி மைசூரு சாமுண்டி மலையில் விவசாயி புட்டய்யா தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கடந்த 10 நாட் களும் கன்னட மக்களின் பண்பாடு, கலாச்சாரம், கலை பெருமையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தசரா திருவிழாவின் இறுதி நாளான இன்று விஜய தசமியை முன்னிட்டு நண்பகல் 12.15 மணிக்கு தனுர் லக்னத்தில் நந்திகொடிக்கு முதல்வர் சித்தராமையா பூஜை செய்கிறார். இதை தொடர்ந்து பகல் 12.30 மணி முதல் 3.30 மணி வரை மகர லக்னத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ‘ஜம்போ சவாரி' என்று அழைக்கப்படும் யானை ஊர்வலத் தையும் தொடங்கி வைக்கிறார். இதில் மைசூருவின் புதிய மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், மறைந்த கண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் மனைவியும், மகாராணியுமான பிரமோதாதேவி மற்றும் கர்நாடக மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.
ஜம்போ சவாரியின் போது அர்ஜூனா என்ற யானை 5-வது முறையாக 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியின் சிலையை சுமந்து மைசூருவின் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக வரும். இதனை பின் தொடர்ந்து துர்கா பரமேஸ்வரி, கோபாலசாமி, பிரசாந்தா, ஹர்ஷா, அபிமன்யு, சரளா, பலராமன் ஆகிய யானைகள் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக பவனி வரும். அப்போது கர்நாடக காவல்துறையினரின் மேள தாள இசை முழக்கங்கள் அதிர ஊர்வலம் தொடங்கும். இந்த ஊர்வலத்தில் கர்நாடகாவின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.
சுமார் 5 கிமீ தூரம் வரை செல்லும் இந்த ஊர்வலத்தில் கர்நாடகாவில் பிரபலமான 33 கலை குழுவினர்களின் பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், புலி வேஷம், கோலாட்டம், டோளு குனிதா, டொல்லு குனிதா, வீரகாசா போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. யானைகளின் அணிவகுப்பை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட குதிரைகளின் அணிவகுப்பு நடைபெறும். இதைத் தொடர்ந்து கர்நாடக காவல்துறையினரின் தீப்பந்த அணிவகுப்பு நடக்கிறது.
இந்த கண்கவர் தசரா திருவிழா வைக் காண பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் மைசூருவில் குவிந்துள்ளனர். இதனால் 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணித்து வருகின்றனர்.