கர்நாடகாவில் விரைவில் பசுவதை தடுப்பு சட்டம்: பாஜக தேசிய செயலாள‌ர் சி.டி.ரவி தகவல்

சி.டி.ரவி: கோப்புப்படம்
சி.டி.ரவி: கோப்புப்படம்
Updated on
1 min read

கர்நாடக மாநில‌த்தில் விரைவில் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும் என, பாஜக தேசிய செயலாள‌ர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 2010-ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் மாட்டை இறைச்சிக்காக‌ கொல்வதும், மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கும் தடை செய்ய வழிவகை செய்யப்பட்ட‌து. 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருந்த பசுவதை தடுப்பு சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, 2018-ம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் பாஜக ஆட்சி அமைந்ததும் மீண்டும் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார். பசுக்களை ஆபத்தில் இருந்து காப்பதற்காவும், பசுக்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்குக் கொண்டு செல்லவும் பசு சஞ்சீவினி திட்டத்தை கொண்டுவந்தார்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, ''கர்நாடகாவில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும். இதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்குமாறு கர்நாடக கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவானிடம் பேசி இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரபு சவான் கூறுகையில், ''பசுவை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் அதனை கொல்வதை ஏற்க முடியாது. பசு வதைக்கு எதிராக சில மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. ப‌சுக்களை பாதுகாக்கும் வகையில் பசுவதை தடுப்பு சட்டத்தைக் கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது. அந்த ச‌ட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்கான தேவையான‌ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இது குறித்து, முதல்வர் எடியூரப்பாவுடன் வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்'' என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in