

கர்நாடக அமைச்சரவை இன்னும் ஓரிரு நாட்களில் விரிவாக்கம் செய்யப்படும் என, முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்பக் கோரி 10-க்கும் மேற்பட்ட மூத்த பாஜக எம்எல்ஏக்கள் கோரி வருகின்றனர். இதற்கு முதல்வர் எடியூரப்பா சம்மதம் தெரிவித்துள்ளதால், பாஜக எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ், மஜதவில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறிய எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், எச்.விஸ்வநாத் ஆகியோரும் அமைச்சர் பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ரேணுகாச்சார்யா, ராஜூகவுடா, சங்கர் பட்டீல், பூர்ணிமா சீனிவாஸ் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவிக்கான காய் நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன் நீர்வளத்துத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி வீட்டில் ரகசிய ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ''அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுமா? விரிவாக்கம் செய்யப்படுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.
புதிய அமைச்சரவையில் யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது என்பது குறித்து 3 நாட்களுக்குள் பாஜக மேலிடத் தலைவர்கள் முடிவெடுப்பதாக கூறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா, ராஜூ கவுடா உள்ளிட்டோர் பாஜக மாநில தலைவர் நளின்குமாரையும், சில அமைச்சர்களையும் சந்தித்து பேசியதை நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை'' என்றார்.