Published : 22 Nov 2020 03:40 PM
Last Updated : 22 Nov 2020 03:40 PM

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2.6 கோடி குடும்பங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர்: பிரதமர் மோடி

புதுடெல்லி

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2.6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் விந்தியாச்சல் பகுதியில் உள்ள மிர்சாப்பூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் ஊரகக் குடிநீர் விநியோக திட்டங்களுக்கு காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியின்போது கிராம தண்ணீர் மற்றும் சுகாதார குழுவின் உறுப்பினர்களோடு பிரதமர் உரையாடினார். மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் மற்றும் அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ள திட்டங்களின் மூலம் 2,995 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்புகள் அளிக்கப்படும். இதன் மூலம் சுமார் 42 லட்சம் பேர் பயனடைவர். இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக கிராம தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்காக ரூ. 5,555.38 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 24 மாதங்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டது முதல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் உட்பட நாட்டில் 2 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிதண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜல் ஜீவன் இயக்கத்தின் வாயிலாகத் தங்களது வீடுகளிலேயே

குடிதண்ணீர் கிடைப்பதால் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை மிகவும் சுலபமாகி இருப்பதாக அவர் மேலும் கூறினார். அசுத்தமான தண்ணீரால் ஏழைக் குடும்பங்களிடையே நிலவிவந்த காலரா, டைஃபாய்டு, மூளையில் ஏற்படும் வீக்கம் போன்ற பல்வேறு நோய்கள் குறைந்திருப்பது இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய பயன் என்று அவர் தெரிவித்தார். பல்வேறு வளங்கள் இருந்தபோதிலும் விந்தியாச்சல் அல்லது பண்டல்கண்ட், பற்றாக்குறை பகுதிகளாகவே இருந்து வந்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார். பல்வேறு ஆறுகள் இந்த பகுதிகளில் உள்ள போதிலும், வறண்ட மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டு ஏராளமான மக்கள் வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த திட்டங்களின் வாயிலாக தண்ணீர் பஞ்சம் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு துரித வளர்ச்சியும் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குழாய் தண்ணீர் விந்தியாஞ்சல் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராமங்களை அடையும்போது, இங்கு வசிக்கும் குழந்தைகளின் சுகாதாரம் மேம்படுவதுடன் அவர்களது உடல் மற்றும் மன நலனும் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். ஒருவருக்கு சுதந்திரமாக முடிவு எடுப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து, உங்கள் கிராம வளர்ச்சிக்காக செயல்படும்போது அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரது தன்னம்பிக்கையையும் அது உயர்த்தும் என்று அவர் கூறினார். தற்சார்பு இந்தியாவிற்கான வலிமை தற்சார்பு கிராமங்களில் இருந்து கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பெருந்தொற்றுக் காலத்திலும் சிறப்பான ஆளுகையை வழங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தியமைக்கு உத்தரப் பிரதேச அரசுக்கு பிரதமர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்தப் பகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மோடி கோடிட்டுக் காட்டினார். மிர்சாபூரில் வழங்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர், மின்சார இணைப்பு, சூரிய மின் சக்தித் திட்டம், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் விளையும் தன்மையற்ற நிலங்களில் நிறைவடைந்துள்ள நீர்ப் பாசனத் திட்டம் மற்றும் சூரிய மின் சக்தித் திட்டங்கள் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

ஸ்வாமித்வா திட்டம் குறித்து பேசிய பிரதமர், சரிபார்க்கப்பட்ட குடியிருப்பு மற்றும் நில சொத்துக்களின் உரிமை ஆவணங்கள் உரியவர்களிடம் முறையாக வழங்கப்படுவதுடன், நிலைத்தன்மை மற்றும் அவர்களது உரிமைகளுக்கு உறுதிப்பாடு ஏற்படுத்தப்படுவதாகக் கூறினார். இதன் மூலம் ஏழை எளியவர்களின் சொத்துக்களின் மீது சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்வது தடுக்கப்படுவதுடன், இந்த சொத்துக்களை கடனுக்கான ஈடாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் வலுப்படுத்துகிறது.

பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய திரு மோடி, சிறப்புத் திட்டங்களின் கீழ் பழங்குடியினரின் பகுதிகளுக்கு இந்தத் திட்டங்கள் சென்றடைவதாகக் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பழங்குடியின் முக்கிய தொகுப்பிற்கும் இந்த வசதியை அளிப்பதே இதன் நோக்கம். வனப் பொருட்கள் சார்ந்த திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பகுதிகளுக்கான திட்டங்களில் நிதி பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கவும், இந்தப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி உள்ளூரில் முதலீடுகளை மேற் கொள்ளவும், மாவட்ட தாது நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இந்த நிதியின் கீழ் ரூபாய் 800 கோடி திரட்டப்பட்டு ஆறாயிரத்திற்கும் அதிகமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் அபாயம் இன்னும் நீடிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிக சிரத்தையுடன் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x