

கோவிட் பாதிப்பை கட்டுப்படுத்த இமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உயர்நிலை குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கரோனோ நோயால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து 5 சதவிகிதத்திற்கும் குறைவாக 4.85 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43,493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 85,21,617 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93.69 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
நோயிலிருந்து குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து தற்போது 80,80,655 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 45,209 பேர் கொவிட் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு, 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் கோவிட் உதவி மற்றும் மேலாண்மைக்காக உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழுக்களை அனுப்ப மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று நபர் அடங்கிய குழுக்கள் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு நேரில் சென்று, கட்டுப்பாடு, கண்காணிப்பு, பரிசோதனை, தொற்று தடுப்பு மற்றும் திறன்மிகு மருத்துவ மேலாண்மை ஆகியவற்றில் மேற்கண்ட மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கும்.
முன்னதாக ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழுக்களை மத்திய அரசு அனுப்பியிருந்தது.