Published : 22 Nov 2020 02:25 PM
Last Updated : 22 Nov 2020 02:25 PM

தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றின் மீது தடைகளை விதிக்க முன்வருமாறு சர்வதேச சமுதாயத்திற்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்தார்.

அதிகரித்து வரும் தீவிரவாத செயல்களைப் பற்றி கவலை தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், கலந்துரையாடல்களை நடத்தி, நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் இந்தியாவின் 'சர்வதேச தீவிரவாதம் குறித்த விரிவான மாநாட்டுக்கான' முன்மொழிதலை செயல்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தீவிரவாத செயல்களில் இருந்து நாடு பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்த அவர், வெற்று வார்த்தைகளுக்கான காலம் முடிந்துவிட்டது என்றும், வலுவான நடவடிக்கைக்கான நேரமிது என்றும் கூறினார். "அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான உலக நடைமுறைக்கான சீர்திருத்தம் ஐக்கிய நாடுகள் சபையில் செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

இன்ஃபோசிஸ் ஃபவுண்டேசனின் தலைவர் சுதா மூர்த்திக்கு, அவரது சமூக சேவைக்காக, 'லால் பகதூர் சாஸ்திரி சிறப்பு விருது' வழங்குவதற்காக லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசிய குடியரசு துணைத் தலைவர், அமைதியை ஊக்குவிப்பதற்கும் ஏழ்மையை ஒழிப்பதற்கும், மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், தீவிரவாதத்தை அழிப்பதற்கும் அனைத்து நாடுகள், குறிப்பாக தெற்காசியாவில் உள்ள நாடுகள், ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு புகழாரம் சூட்டிய குடியரசு துணைத் தலைவர், எளிமையான பின்னணியில் இருந்து வளர்ந்த இந்தியாவின் தவப்புதல்வர் அவர் என்றும், பிரதமர் பதவியை வகித்தபோதும் எளிமையாகவும், அடக்கமாகவும், மனித நேயத்துடனும் லால் பகதூர் சாஸ்திரி திகழ்ந்தார் என்றும் கூறினார்.

"கண்ணியம் மற்றும் அப்பழுக்கற்ற நேர்மையோடு விளங்கிய அரசியல்வாதியான அவர், உயர்ந்த நற்பண்புகளில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் நாட்டுக்கு சேவை ஆற்றினார்," என்று குடியரசு துணைத் தலைவர் மேலும் கூறினார்.

லால் பகதூர் சாஸ்திரியின் உயர்ந்த பண்புகளின் ஒன்றைப் பற்றி குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், சிறப்பான முறையில் கருத்துக்களை வெளிப்படுத்தும் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தும் திறமையை அவர் பெற்றிருந்தார் என்றார். "எதிர் தரப்பின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதே பேச்சுவார்த்தைகளில் அவரது வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாகும். அடுத்தவரது உணர்வுகளுக்கு அதிகபட்சமான மரியாதையை அளிப்பதற்கு அவர் என்றுமே தயாராக இருந்தார்," என்று அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் சாஸ்திரி, பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சிக்கு அழுத்தம் அளித்த காரணத்தால் தான் நாட்டின் உணவு பாதுகாப்பை விவசாயிகளால் உறுதி செய்ய முடிந்தது என்றும், இந்தியாவால் மிகப்பெரிய உணவுப் பொருள் உற்பத்தியாளராக உருவாக முடிந்தது, என்றும் நாயுடு கூறினார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்களப் போராளிகளைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், “பொது முடக்கத்தின் போது பல்வேறு தடைகள் இருந்த போதிலும் நமது விவசாயிகள் முன்களப் போராளிகளாக செயல்பட்டு போதிய உணவு தானியங்களை உற்பத்தி செய்தனர்.

தங்களது உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், துப்புரவு ஊழியர்கள், மற்றும் ஊடகத் துறையினர் இந்த சோதனை காலத்திலும் முழு ஈடுபாடுடன் பணி புரிந்தனர்‌. அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!” என்று கூறினார்

.மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த நேரத்தில் இந்தியர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

அனைவருக்கும் பகிர்ந்தளித்து அன்பு செலுத்துவது என்பது நமது பாரம்பரிய தத்துவங்களில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. மனிதநேயத்தைக் காப்பதில் நாம் எப்போதும் உறுதியுடன் செயல்பட வேண்டும்”, என்று அவர் வலியுறுத்தினார்.

பகவத் கீதையிலும் தானத்தின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டிருப்பதாக நாயுடு தெரிவித்தார். தானத்தின் தத்துவம் குறித்து இந்திய வாழ்க்கை முறையிலும் புராதன நூல்களிலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். “அரசர்கள் முதல் வசதியான ஜமீன்தார்கள், தனி நபர்கள் வரை, சமுதாயம் முதல் நிறுவனங்கள் வரை, மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறுத் திட்டங்களும், தானங்களும், நன்கொடைகளும் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

பிரபல கொடையாளரும், எழுத்தாளருமான சுதா மூர்த்திக்கு, 21-வது லால் பகதூர் சாஸ்திரி சிறந்த கொடை பணிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மருத்துவம், சுகாதாரம், கல்வி, பொது சுகாதாரம் ஊரக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு திருமதி சுதா மூர்த்தியின் இன்ஃபோசிஸ் பவுண்டேசன் வழங்கி வரும் ஆதரவிற்கு வெங்கய்ய நாயுடு தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

சுதா மூர்த்தியை பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், “இன்ஃபோசிஸ் பவுண்டேசனின் உந்துசக்தியாக விளங்கும் சுதா மூர்த்தி அனைத்து பாராட்டுகளுக்கும், கௌரவத்திற்கும், விருதுகளுக்கும் தகுதியானவர். அவரது தலைசிறந்த சேவையால் பல்வேறு மக்களுக்கு அவர் ஊக்க சக்தியாக விளங்குகிறார்”, என்று குறிப்பிட்டார். பிறருக்கு ஊக்கம் அளிப்பதற்காகவே சுதா மூர்த்தி பாராட்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவரை ஓர் முன்மாதிரி என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், அவரது புத்தகங்களை வாசித்து அவரது வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அனைவருக்கும் பகிர்ந்தளித்து அன்பு செலுத்துதல் என்னும் பண்டைய இந்திய மாண்பை வலியுறுத்திப் பேசிய அவர், மக்களின் நல்வாழ்விற்காக இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். “மகிழ்ச்சி என்பது பொருட்களினால் மட்டும் வருவது அல்ல, அது சேவையின் மூலமாகவும் வருகிறது”, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் சாதனை புரிவோரைக் கௌரவிக்கும் வகையில் லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனம் வழங்கும் தேசிய விருதுகளின் மூலம் சாஸ்திரியின் தொலைநோக்குப் பார்வை நனவாக்கப்படுவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். “பலதரப்பட்ட மக்களின் சிறந்த பணியை போற்றுவதற்காக மட்டும் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை, இவர்களது சேவையைப் பின்பற்றி மற்றவர்களும் இது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம்”, என்று அவர் தெரிவித்தார்.

மேலும் லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைசிறந்த மனிதர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளை பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமென்று அரசுகளை வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

இன்போசிஸ் பவுண்டேசன் தலைவர் சுதா மூர்த்தி, லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவன தலைவர் அணில் சாஸ்திரி, இந்த நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டீ கே ஸ்ரீவஸ்தவா, நிறுவனத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரும் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x