

மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சியோனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. இதில் விபத்து எதுவும் ஏற்படவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போபாலில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி வேத் பிரகாஷ் சிங் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் அதிகாலை 1.45 மணியளவில் சியோனி நகரத்திற்கு அருகில் 4.3 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளது.
பின்னர், அதே இடத்தில் காலை 6.23 மணிக்கு 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இவ்விரண்டு நிலநடுக்கங்களிலும் விபத்து எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி தெரிவித்தார்.
சியோனி நகரிலும் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தனர். அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தூக்கத்திலிருந்து எழுந்து தங்கள் வீடுகளுக்கு வெளியே வந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் குடியிருப்பாளர் பிரவீன் திவாரி கூறுகையில், ''நள்ளிரவுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தின் போது எங்கள் வீட்டில் கதவுகள், ஜன்னல்கள், படுக்கை மற்றும் பிற பொருட்கள் சுமார் 15 விநாடிகள் அதிர்ந்தன. இதனால் அச்சமுற்ற நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தோம். அப்போது சியோனி நகரில் வசிப்பவர்கள் பலரும் வெளியே ஓடி வந்தனர். அச்சம் காரணமாக பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளுக்கு வெளியே இரவு முழுவதும் குளிரில் தங்கியிருந்தனர்'' என்றார்.