குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தத் தயார்; தேதியை அரசுதான் முடிவுசெய்ய வேண்டும்: மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா பேட்டி

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா : கோப்புப்படம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா : கோப்புப்படம்
Updated on
1 min read

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த மக்களவைச் செயலாளராக தயாராகத்தான் இருக்கிறார், ஆனால், தேதிகளை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால், இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகின. அவ்வாறு கூட்டம் நடத்தினாலும், நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் எம்.பி.க்களுக்கும் ஏற்படலாம். கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலும் இதே நிலை நீடித்து முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

அதேபோன்ற சூழல் இந்த முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், கூட்டத்தொடர் நடத்துவது குறித்து மத்தியஅரசு மிகவும் கவனத்துடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தற்போது டெல்லியில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தீவிரமாகப் பரவி மீண்டும் மக்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் குளிர்காலக்கூட்டத்தொடர் நடத்துவது எம்.பி.க்கள், ஊழியர்கள் பாதுகாப்புக்கு பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.

வழக்கமாக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 2 வாரத்தில் தொடங்கி டிசம்பர் 2-வது வாரம் வரை நடைபெறும். ஆனால், இதுவரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் செய்யவில்லை. அதற்கான பணிகளும் ஈடுபடவில்லை.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதென்றால், 15 நாட்களுக்கு முன்னதாகவே எம்.பி.க்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கேள்வி நேரத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அனுப்புமாறு கோர வேண்டும். ஆனால், இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.

இதனால் குளிர்காலக் கூட்டத்தொடரை 2021-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடருடன் சேர்த்து நடத்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லா நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவல் இருந்த நிலையிலும் அனைத்து முன்னேற்பாடுகளுடன் மழைக்காலக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டமும் வழக்கமாக நடந்து வருகிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த மக்களவைச் செயலாளர் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், கூட்டத்தொடர் நடத்தப்படும் தேதிகளைப் பொருத்தவரை நாடாளுமன்ற விவகாரதத்துக்கான மத்திய அமைச்சரவைதான் முடிவு எடுக்க வேண்டும்.

நாடாமன்ற விவகாரங்களுக்கான மத்தியஅமைச்சரவை தேதிகளை முடிவு செய்து, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்துத்தான் தேதிகளை உறுதியாக அறிவிக்கும்.

அனைத்து இந்திய தலைமை அதிகாரிகள் கூட்டம் நவம்பர் 25, 26 தேதிகளில் வதோதராவில் உள்ள கேவாடியாவில் நடத்தப்பட உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர்மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இது மட்டுமல்லாமல் டெல்லியில் எம்.பி.க்களுக்காக கட்டப்பட்டுள்ள 76 வீடுகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கடந்த 27 மாதங்களாக ரூ.188 கோடி மதிப்பில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in