ஒருங்கிணைந்த முயற்சிகளால்தான் கரோனாவிலிருந்து உலக நாடுகள் விரைவாக மீள முடியும்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

காணொலி வாயிலாக நடந்த ஜி20 நாடுகள் மாநாட்டில்  பிரதமர் மோடி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
காணொலி வாயிலாக நடந்த ஜி20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read


மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக கரோனா வைரஸ் அமைந்துள்ளது. 2-ம் உலகப்போருக்குப்பின் உலக நாடுகள் சந்தித்துவரும் மிகப்பெரிய சவாலாக கரோனா வைரஸ் . ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமே அந்த பாதிப்பிலிருந்து உலக நாடுகள் விரைவாக மீள முடியும் என்று ஜி20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

ஜி20 நாடுகள் மாநாட்டை இந்த ஆண்டு சவுதி அரேபியா நடத்தியது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜி20 நாடுகளின் தலைவர்கள் யாரும் நேரடியாக மாநாட்டுக்குச் செல்லாமல், காணொலி மூலமே பங்கேற்றனர். 2022-ம் ஆண்டு ஜி20 நாடுகள் மாநாட்டை இந்தியா நடத்துகிறது.

2 நாட்கள் நடக்கும் இந்த ஜி20 நாடுகள் மாநாடு 21-ம் நூற்றாண்டில் அனைவரும் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது. கரோனா நோய் தொற்றிலிருந்து மீள்வது, பொருளாதார மீட்சி, வேலைவாய்ப்பை கொண்டுவருவது, முழுமையான, நிலையான, விரிந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக கரோனா வைரஸ் அமைந்துள்ளது. 2-ம் உலகப்போருக்குப்பின் உலக நாடுகள் சந்தித்துவரும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ்.

பொருளாதார மீட்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றை மீட்பதற்காக ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பூமியை பாதுகாக்கும் நோக்கில், நாடுகளின் தலைவர்களாக இருக்கும் நாம்தான் எதிர்கால மனிதகுலத்துக்கு அறங்காவலர்கள்.

அறிவுத்திறன், தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை அடிப்படையில் உலகளாவிய குறியீட்டை நாம் புதிதாக உருவாக்கி முன்னோக்கி நகர்வது அவசியம்.

திறன்களை ஒன்று சேர்க்கும் தளத்தை பன்முக திறன்கள் மற்றும் மறு திறன்களால் உருவாக்க வேண்டும். இதன்மூலம் தொழிலாளர்களின் மதிப்பு, வாய்ப்புகள் அதிகரிக்கும். மனிதகுலத்திற்கு அவர்கள் அளிக்கும் நன்மையால் புதிய தொழில்நுட்பங்களின் மதிப்பு அளவிடப்பட வேண்டும்.

பிரச்சினைகளை, நெருக்கடியை கூட்டாகவும் நம்பிக்கையுடனும் போராட எங்கள் மக்களை ஊக்குவிக்க எங்கள் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மைதான் உதவுகிறது. இந்த பூமிக்காக நாம் அளிக்கும் நம்பகத்தன்மைதான் நம்மை ஆரோக்கியமாகவும், முழுமையான வாழ்க்கை வாழவும் ஊக்குவிக்கும்”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

15-வது ஜி20 நாடுகள் மாநாட்டை வெற்றிகரமாக இந்த கரோனா பரவலுக்கு மத்தியில் நடத்திய சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் பேசியபின் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஜி20 நாடுகள் தலைவர்களுடன் ஆலோசனை சிறப்பாக அமைந்தது. கரோனாவிலிருந்து விரைவாக உலக நாடுகள் மீள்வதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் முக்கியமானது. காணொலி மூலம் ஜி20 மாநாட்டை ஏற்பாடு செய்த சவுதி அரேபியாவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in