

கரோனா தடுப்பு மருந்து விஐபி, மற்றும் விஐபி அல்லாதோர் என்ற அடிப்படையில் வழங்கக் கூடாது. பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் காணொலிக் காட்சி மூலம் பேசியதாவது:
டெல்லியில் கரோனாவை சமாளிப்பது அரசுக்கு சவாலாக உள்ளது. எனினும், கரோனா தொற்று காரணமாக டெல்லியில் இப்போது முழு முடக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன். கரோனா தடுப்பு மருந்து விஐபி, மற்றும் விஐபி அல்லாதோர் என்ற அடிப்படையில் வழங்கக் கூடாது. பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
கரோனாவை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறையை முதலில் டெல்லி அரசுதான் கடந்த மே மாதம் அறிவித்தது. கரோனாவால் டெல்லி நிலைகுலையவில்லை. கரோனா காலத்தில் டெல்லி அரசுக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி, தனியார் தொண்டு அமைப்புகள், மத அமைப்புகள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். டெல்லியில் சாலைகளை மேம்படுத்தி வருகிறோம். டெல்லியில் காற்று மாசைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2020-ம் ஆண்டுதான் டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் காற்று மாசு ஏற்படும் கடைசி ஆண்டாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.