ஆந்திராவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தபடி மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞர்

மருத்துவர்களுடன்  வரபிரசாத்.
மருத்துவர்களுடன் வரபிரசாத்.
Updated on
1 min read

ஆந்திராவில் தெலுங்கு பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்தவாறு இளைஞர் ஒருவர் மூளை அறுவை சிகிச்சை செய்து

கொண்டார். இந்த சாதனையை குண்டூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

குண்டூர் மாவட்டம், பாட்டிபண்டல கிராமத்தை சேர்ந்தவர் வரபிரசாத் (33). இவருக்கு 5 ஆண்டுகளாக கடும் தலைவலி இருந்து வந்தது. இதனால், கடந்த 2016-ல் ஹைதராபாத்தில் மருத்துவப் பரிசோதனை செய்ததில், இவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கட்டி அகற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரேடியேஷன் சிகிச்சையும் முறைப்படி அளிக்கப்பட்டு வந்ததாலும், வரபிரசாத்திற்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் குண்டூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வரபிரசாத் மீண்டும் அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். இதில் கடந்த முறை அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் மீண்டும் மற்றொரு கட்டி வரத்தொடங்குவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ஆதலால் உடனடியாக வரபிரசாத்திற்கு தங்களது சொந்த செலவிலேயே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வரபிரசாத்திற்கு மூளையில் பேச்சுத்திறன் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. இதற்கு நோயாளி அறுவை சிகிச்சையின்போது விழித்திருப்பதும் அவசியமாகும். இதனால், வர பிரசாத்திற்கு என்னென்ன பிடிக்கும் என மருத்துவர்கள் அவரிடம் கேட்டனர்.

அதற்கு, நடிகர் நாகார்ஜுனா பங்கேற்று நடத்தும் தெலுங்கு பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியும், அவதார் ஆங்கில படமும் பார்க்க வேண்டும் என வரபிரசாத் கூறியுள்ளார். உடனே அறுவை சிகிச்சை செய்யப்படும் ஆபரேஷன் தியேட்டரிலேயே இதற்கு மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர் வரபிரசாத்திற்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சில நாட்கள் மருத்துவர்கள் தங்களது கண்காணிப்பில் வரபிரசாத்திற்கு சிகிச்சை அளித்து, நேற்று முன்தினம் அவரை டிஸ்சார்ஜ் செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in