

உ.பி. மத்திய ஷியா வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ, அயோத்தி விவகாரத்தில் தொடக்கம் முதலாக ராமர் கோயிலுக்கு ஆதரவாகப் பேசி வந்தார். சன்னி முஸ்லிம்களின் மற்ற விஷயங்களிலும் ரிஜ்வீ கூறிய கருத்துகள் கண்டனத்திற்கு உள்ளாயின.
டெல்லியின் வரலாற்றுச் சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்துவிட்டு முஸ்லிம்களின் இடுகாடாக மாற்ற வேண்டும் எனவும், நாட்டின் மதரஸாக்களில் தீவிரவாதம் வளர்வதாகவும் ரிஜ்வீ கூறியிருந்தார்.
அதேசமயம், தாம் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர் என அவர் கூறிவந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, பாஜக மற்றும் இந்துத்துவாவுக்கு ஆதரவாகவும் அவர் பேசி வந்தார்
அவர் ஷியா வக்ஃபு வாரியத் தலைவராக இருந்தபோது பதிவான வழக்குகள் காரணமாகவே அவர் இவ்வாறு பேசி வருவதாக கூறப்பட்டது. 2016, 2017-ம் ஆண்டுகளில் லக்னோ மற்றும் அலகாபாத்தில் ரிஜ்வீ மீது வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பு மற்றும் லஞ்ச வழக்குகள் பதிவாகி இருந்தன. கிடப்பில் போடப்பட்டிருந்த இவ்விரண்டு வழக்குகளும், ரிஜ்வீயின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 447, 441 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் இந்த வழக்குகளில் முதல் குற்றவாளியாக வசீம் ரிஜ்வீ இடம் பெற்றுள்ளார். இவருடன் வக்ஃபு வாரியத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய சைதைன் ரிஜ்வீ, உ.பி. தொழிலதிபர்களான நரேஷ் கிருஷ்ணா சொமைனி, வினய் கிருஷ்ணா சொமைனி ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
உ.பி. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மோஷின் ராசாவின் பரிந்துரையை ஏற்று, முதல்வர் யோகி இவ் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக சிபிஐ கடந்த வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் வசீம் ரிஜ்வீ கூறும்போது, “முந்தைய சமாஜ்வாதி ஆட்சியில் பதிவான இந்த வழக்குகளில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனது கவனத்துக்கு கொண்டு வராமலேயே பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகள் அப்போதைய அரசு செய்த தவறுகள் ஆகும். இவ்வழக்குகளில் என்னை சிக்க வைத்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது” என்றார்.
வக்ஃபு வாரியத் தலைவராக ரிஜ்வீ இருந்தபோது, ராமர் கோயில், காஷ்மீர், முத்தலாக், நிக்காஹ் ஹலாலா ஆகிய விவகாரங்களில் இந்துத்துவாவினரை ஆதரிக்கும் வகையில் இந்தி திரைப்படங்களையும் தயாரித்தார். கடைசியாக அவர், முஸ்லிம்களின் இறைத்தூதரான முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக எடுத்த படம், கடும் எதிர்ப்பு காரணமாக இணையதளத்தில் மட்டும் வெளியானது.