Last Updated : 21 Nov, 2020 05:40 PM

 

Published : 21 Nov 2020 05:40 PM
Last Updated : 21 Nov 2020 05:40 PM

எரிப்பதா; புதைப்பதா? -மதம் மாறிய தாயின் மரணத்தில் மகன்களின் போராட்டம்: மகாராஷ்டிராவில் விநோதம்

மதம் மாறிய தாய் மரணமடைந்தபோது அவரது இரு மகன்களும் எரிப்பதா, புதைப்பதா என்ற போராட்டத்தில் ஈடுபட்ட விநோத சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய 65 வயது பெண்மணி ஒருவர், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் சமீபத்தில் இறந்துவிட்டார். அவண்டே கிராமத்தில் அவரது மகன்களில் ஒருவரால் அடக்கம் செய்யப்பட்டார், அதே நேரத்தில் இந்து மதத்தைப் பின்பற்றிய அவரது மற்றொரு மகன் அவரது தாய்க்கு அடையாள தகனம் செய்ததாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

பால்கர் மாவட்டம் வாடா தாலுகாவில் உள்ள அவண்டே கிராமத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் குறித்து காவல்நிலைய உதவி ஆய்வாளர் திலீப் பவார் கூறியதாவது:

"65 வயதான ஃபுலாய் தபாடே என்ற பெண் சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் (நவம்பர் 18) இரவு வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். மறைந்த தபாடே, அவரது கணவர் மஹாது மற்றும் இளைய மகன் சுதான் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதம் மாறினார்.

அதே நேரத்தில் அவரது மூத்த மகன் சுபாஷ் இந்துவாகவே இருப்பதையே அவர் தேர்வு செய்தார். அவர் கிறித்தவ மதத்திற்கு மாறவில்லை.

தாயின் மரணத்திற்குப் பிறகு, உடன்பிறப்புகளுக்கு இடையில் அவரது இறுதி சடங்குகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. ஒவ்வொரு சகோதரரும் தாங்கள் பின்பற்றிய மதங்களின் பாரம்பரியத்தின் படி இறுதிச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவானது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏராளமான கிராம மக்கள் கூடியிருந்தாலும், சகோதரர்கள் யாரும் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, கிராமத்தின் போலீஸ் பாட்டீல் (போலீஸ் அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் உள்ள ஒரு மத்தியஸ்தர்) வாடா காவல் நிலைய அதிகாரிகளிடம் சென்று இதுகுறித்து முறையிட்டார்.

காவல்துறை அதிகாரி சுதிர் சங்கே கிராமத்திற்கு விரைந்து சென்றார். இருதரப்பினரிடமும் குடும்ப உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினார். கடைசியாக இறந்த பெண் கிறிஸ்தவ பாரம்பரியத்தின் படி அடக்கம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இறந்த பெண்ணின் சடலம் வசாய் அருகே பச்சு தீவில் அடக்கம் செய்யப்பட்டது.

இருப்பினும், இன்னொரு மகனான சுபாஷ் இதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர் தனது தாயைப் போன்று ஒரு பொம்மையை பைரில் செய்துகொண்டு அதற்கு தீ மூட்டி தாயின் அடையாள தகனத்தை நடத்தினார்.''

இவ்வாறு உதவி ஆய்வாளர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x