

21-ம் நூற்றாண்டு இளைஞர்கள் தெளிவான சிந்தனையுடன் முன்னேறி செல்ல வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
குஜராத் மாநிலம் காந்திநகர் பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார். 45 மெகாவாட் மோனோகிரிஸ்டாலின் சூரிய சக்தி போட்டோவோல்டைக் தகடு உற்பத்தி நிலையம், நீர் தொழில்நுட்ப சிறப்பு மையம் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பல்கலைக்கழகத்தில், ‘இன்னோவேசன் மற்றும் இன்குபேசன் மையம்- தொழில்நுட்ப வர்த்தக இன்குபேசன்’, ‘ மொழியாக்க ஆராய்ச்சி மையம்’, ‘விளையாட்டு வளாகம்’ ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார்.
மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர், உலகம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், பட்டம் பெறுவது எளிதான காரியம் அல்ல என்று கூறினார். ஆனால், உங்களது திறமை இந்த சவால்களை விட மிகப் பெரியது. பெருந்தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் எரிசக்தி துறையில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மாணவர்கள் இத்தொழிலில் நுழைந்துள்ளனர் என அவர் கூறினார்.
இந்த வழியில், தற்போது இந்தியாவில் எரிசக்தி துறை, தொழில் தொடங்குதல், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் வளர்ச்சிக்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். கார்பன் உமிழ்வு அளவை 30-35 சதவீதமாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டு, நாடு முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.
நமது எரிசக்தி தேவையில், இயற்கை வாயுவின் பங்கை, இந்த தசாப்தத்தில் 4 மடங்காக அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இருமடங்காக்க பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான ஸ்டார்ட் அப் சூழல்முறை வலுப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இதற்காக மாணவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுக்கு நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
வாழ்க்கையில் நோக்கம் இருக்க வேண்டும் என மாணவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். வெற்றிகரமான மனிதர்களுக்கு பிரச்சினைகள் இல்லை என்று கூற முடியாது என தெரிவித்த அவர், சவால்களை ஏற்றுக் கொண்டு, அதை எதிர்த்து, முறியடித்து, யார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறாரோ அவர்தான் வெற்றி பெற முடியும் என்று கூறினார். சவால்களை எதிர்கொண்டவர்கள், பின்னாளில் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர் என அவர் மேலும் கூறினார்.
1922 முதல் 47 வரையிலான காலத்தில் இளைஞர்கள் எல்லாவற்றையும் சுதந்திரத்துக்காக தியாகம் செய்தனர் என அவர் கூறினார். இந்த நூற்றாண்டில் வாழும் மாணவர்கள், தற்சார்பு இந்தியா இயக்கத்தில் சேர்ந்து, பொறுப்புணர்வை உருவாக்கி கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விதையின் வெற்றி பொறுப்புணர்வில் உள்ளது என குறிப்பிட்ட பிரதமர், பொறுப்புணர்வு வாழ்க்கையின் நோக்கமாக மாற வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நோக்கமுடையவர்கள் வாழ்க்கையில் முன்னேறி உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வாழ்க்கையில் பொறுப்புணர்வுள்ள செயல்களை அவர்கள் செய்வதாக கூறினார்.
தோல்வியடைபவர்கள் சுமை உணர்விலேயே வாழ்கின்றனர் என அவர் கூறினார். ஒருவரது வாழ்வில் பொறுப்புணர்வு, வாய்ப்புகளை வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தியா பல துறைகளில் முன்னேறி வருவதாகக் கூறிய அவர், அந்த அர்ப்பணிப்புடன் இளம் பட்டதாரிகள் முன்னேறி செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
21-ம் நூற்றாண்டு இளைஞர்களாகிய தற்போதைய தலைமுறையினர், தெளிவான மனநிலையுடன் முன்னேற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தூய்மையான இதயம் என்பது தெளிவான நோக்கமாகும். 21-ம் நூற்றாண்டில், இந்தியாவிடம் இருந்து உலகம் கொண்டுள்ள எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் மிகவும் அதிகம் எனக்கூறிய அவர், இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள், மாணவர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களுடன் தொடர்பு கொண்டவை எனக் கூறினார்.