

பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக போன் செய்தால் தம் உதவியாளர்கள் மூலம் பதிலளிக்காமல் ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் பேச வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
உ.பி.யில் அவசரமான, அவசியமானக் குறைகளை கூற மாவட்ட தலைமை அதிகாரிகளிடம் அரசு சார்பிலான கைப்பேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதை பலரும் தன் உதவியாளர் அல்லது மக்கள் தொடர்பு அதிகாரிகளிடம் அளித்து பதிலளிக்கும்படி கூறி விடுகின்றனர்.
இதனால், பொதுமக்கள் தங்கள் குறைகளை கூற முடியாத நிலையும், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத சூழலும் ஏற்படுகிறது. இதன் மீதானப் புகார்கள் முதல்வர் யோகியின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதில் தலையிட்ட முதல்வர் யோகி தனது மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை தலைவர்களுக்கும் ஒரு புதிய உத்தரவை இட்டுள்ளார். இதன்படி, அனைவருக்கும் அரசு கைப்பேசிகளில் வரும் அழைப்புகளுக்கு அவர்களே பதில் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் யோகி இட்ட உத்தரவில் கூறும்போது, ‘பொதுமக்களின் அழைப்பை எடுக்க முடியாமல் போனால் அந்த எண்ணுக்கு மீண்டும் தொடர்கொண்டு குறைகளை கேட்க வேண்டும்.
இதை அனைவரும் செய்கிறார்களால் என முதல்வர் அலுவலகத்தில் இருந்து புதிய எண்கள் மூலமாக தொடர்கொண்டு சோதிப்போம். இதில் சிக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக பாஜகவின் எம்எல்ஏ மற்றும் எம்.பிக்களின் அழைப்புகளையும் அதிகாரிகள் உதவியாளர்கள் மூலம் பேசி தட்டிக் கழிப்பதாகக் புகார் எழுந்தது. இதை முதல்வர் யோகி முன்பு வைத்ததை அடுத்து இந்த புதிய உத்தரவு இடப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.