

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்காக சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வித் துறையையும் வைத்திருக்கும் முதல்வர் பிரமோத் சாவந்த், நவம்பர் 4-ம் தேதி அனைத்து கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளையும் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி மாணவர்களிடம் வெப்பத் திரையிடல், கை சுத்திகரிப்பு, முகக்கவசம் அணிவது, வகுப்பறைகளில் தனிமனித இடைவெளி போன்ற நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆரம்ப கட்டமாக நவம்பர் 21 முதல் 10 மற்றும் 12 வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகளை மீண்டும் திறக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிடிஐயிடம் பேசிய மாநில கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“கோவாவில் பள்ளிகள் சனிக்கிழமை காலை 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. வகுப்பறைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து கோவிட் 19 நெறிமுறைகளையும் பள்ளிகள் பின்பற்றுகின்றன. வகுப்புகளை மீண்டும் தொடங்க அவர்கள் தயாராக இருக்கும்படி நிர்வாகங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. "பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்வதற்கு முன்னர் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் கல்வித் துறை ஆலோசனை நடத்தப்பட்டது.
இவ்வாறு மூத்த கல்வி அதிகாரி தெரிவித்தார்.
பனாஜியைச் சேர்ந்த பள்ளியின் மூத்த அலுவலக பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், "பள்ளியின் நுழைவு வாயிலில் உடல் வெப்பம் அளவிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் கைகளை தூய்மையாக வைத்திருப்பதை நாங்கள் கட்டாயமாக்கியுள்ளோம்.
வகுப்பறையின் அனைத்து மாணவர்களையும் ஒரே அமர்வில் பங்கேற்க தடைசெய்யப்பட்டுள்ளது, இதன் காரணமாக நாங்கள் வெவ்வேறு அமர்வுகளுக்கு திட்டமிட்டுள்ளோம்.
முதல் நாளான இன்று, மாணவர் வருகை குறைவாகவே இருந்தது, ஏனெனில் பாதி மாணவர்கள் மட்டுமே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மீதமுள்ள மாணவர்கள் அடுத்த வாரம் முதல் அழைக்கப்படுவார்கள், அனைத்து மாணவர்களுக்கும் பாடங்கள் சேரவேண்டுமெனில் ஆசிரியர்கள் வெவ்வேறு அமர்வுகளில் குறைந்தபட்சம் ஐந்து முறையாவது ஒரே பகுதியை மீண்டும் மீண்டும் கற்பிக்க வேண்டியிருக்கும்'' என்றார்.
நடப்பு கல்வியாண்டில் 30 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று கோவா இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் (ஜி.பி.எஸ்.எச்.எஸ்.இ) ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.