

நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ள தகவல் அறிந்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால், காஷ்மீரில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில் பாதுகாப்புப் படையினர் உட்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு நிதியுதவி, ஆயுதங்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட ராணுவம் மற்றும் போலீஸாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்பின், கடந்த 15 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் நேற்று முன்தினம் லாரியில் பதுங்கி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர், இச்சம்பவத்துக்கு பழிதீர்க்க. நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக உளவு அமைப்புகள் நேற்று எச்சரிக்கை விடுத்தன. தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டபோது, இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும், மும்பை தாக்குதல் சம்பவத்தின் 12-வது ஆண்டு நினைவு தினமான வரும் வியாழக்கிழமை அன்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா மற்றும் உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று பிற்பகல் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
தீவிரவாத தாக்குதலை தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துதல், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துதல், முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்துதல் போன்ற விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தவிர டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள முக்கிய பகுதிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துவது என்றும் இந்த ஆலோசனைக் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.