

முகக்கவசம் அணிந்த சூப்பர் ஹீரோக்களின் படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் முன்னெடுத்தார்.
டெல்லியில் கரோனா மூன்றாவது அலை உண்டானதால் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிப்பது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை டெல்லி அரசு முன்னெடுத்துள்ளது.
இதற்கிடையில் சமூக ஊடகங்களின் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்த ‘நாயகர்கள் முகக்கவசம் அணிவார்கள். உங்களுடைய முகக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்’, ‘எல்லா நாயகர்களும் தொப்பி அணிவதில்லை. சிலர் முகக்கவசம் அணிவதுண்டு. #நாயகனாக இருங்கள்’...இதுபோன்ற வாசகங்களுடன் சூப்பர்மேன், பேட்மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களின் சித்திரங்களை ஃபேஸ்புக்கில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பதிவிட்டுள்ளார்.
ஒரு காதில் தொங்கும்படியாக முகக்கவசத்தை அணிதல், தாடைக்குக் கீழே முகக்கவசத்தைத் தொங்க விடுதல், வாயை மட்டும் மூடியவாறு முகக்கவசத்தை அணிதல் போன்று எப்படியெல்லாம் முகக்கவசம் தவறாக அணியப்படுகிறது என்பதைக் காட்சிப்படுத்தும் கேலிச் சித்திரங்களையும் அவர் பதிவிட்டார்.
மேலும் இதுகுறித்து சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சோதனை முயற்சியாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கின்போது நாம் அறிந்துகொண்டது முகக்கவசம் அணிவதே சிறந்த பலனை அளிக்கும் என்பதைத்தான். பேச்சு, இருமல், தும்மல் ஆகியவற்றால் வெளியேறும் நீர்த்திவலைகள் மூலம் பரவக்கூடியது கோவிட்-19 வைரஸ். அப்படி இருக்க ஊரடங்கைக் காட்டிலும் முகக்கவசம் அணிதலே கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கப் பெரிதும் உதவும்.
கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் உரிய பாதுகாப்பு சாதனங்களை அணிவதால்தான் அவர்களால் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால், ஊரடங்கு காலத்திலும் சமூகப் பொறுப்பின்றி சிலர் வீதிகளில் உலா சென்றுவிட்டு நோய்த்தொற்றுடன் தங்களுடைய வீட்டுக்குத் திரும்புகிறார்கள்'' என்று தெரிவித்தார்.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் 2020 மார்ச் 2 அன்று கண்டறியப்பட்டார். அன்றில் இருந்து இன்று வரை டெல்லியில் மட்டும் 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 8 ஆயிரத்து 41 பேர் உயிரிழந்துள்ளனர்.