

டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் டெல்லியிலிருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் மட்டும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். நகரில் ஒட்டுமொத்த பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் வரை அதைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டெல்லி அரசு என்ன விளக்கம் அளிக்கப்போகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன் மாவட்ட நிர்வாகம் டெல்லியிலிருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் ஸ்ரீவாஸ்தவ் கூறியதாவது:
மற்ற மாநிலங்களில், குறிப்பாக டெல்லியில் கரோனா அதிகரித்து வருகிறது. இந்த நபர்களுடனான தொடர்பு டேராடூனில் அதிகரித்து வருவதால், கோவிட் நோய் பாதிப்புகளும் இங்கு அதிகரித்து வருகின்றன.
இதனால், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக, டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்காக மாநில எல்லை சோதனைச் சாவடியில் விரைவான சோதனைகள் தொடக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமிஇன்றி நாங்கள் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் இலவச பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளோம். இதற்காக சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.