

லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை அம்மாநில உள்துறை அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது.
திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக் காட்டியுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
அதற்கேற்ப தற்போது அம்மாநில உள்துறை அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டப்பிரிவுகள் வரையறுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் லவ் ஜிகாத் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, லவ் ஜிகாத் தொடர்பாக நடைமுறையில் சட்ட விளக்கம் ஏதுமில்லை எனத் தெரிவித்திருந்தது.
ஆனால், உ.பி. அரசு மட்டுமல்லாமல் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகாவிலும் இதுபோன்ற சட்டத்தை இயற்ற முடிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
அசோக் கெலாட் கண்டனம்:
லவ் ஜிகாத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர முதல்வருமான அசோக் கெலாட் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "லவ் ஜிகாத் என்ற வார்த்தையை பாஜக உற்பத்தி செய்துள்ளது. தேசத்தைப் பிளக்கவும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கவும் இதனை அக்கட்சி உருவாக்கியுள்ளது. திருமணமென்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. அதனைத் தடுக்க சட்டம் இயற்றுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எந்த நீதிமன்றமும் இதை ஏற்காது. காதலில் ஜிகாத்துக்கு இடமில்லை" எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.