

பூட்டான் நாட்டின் செயற்கைக்கோள்களை இஸ்ரோ வாயிலாக விண்ணில் செலுத்துவது, சர்வதேச அளவில் மூன்றாவது இணைய நுழைவாயிலை பிஎஸ்என்எல்-உடன் இணைந்து அமைப்பது ஆகியனவற்றில் இந்தியா உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
பூட்டானுக்கான ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடியும், பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங்கும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
தொடக்க விழாவிற்குப் பின் காணொலிக் காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, "கரோனா பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் பூட்டானுக்கு இந்தியா பக்கபலமாக இருக்கும். அண்டை நாடான பூட்டானின் தேவைகளைப் பூர்த்தி செய்வது இந்தியாவின் பிரதானப் பணியாக இருக்கும்.
பூட்டான் நாட்டின் செயற்கைக்கோள்களை இஸ்ரோ வாயிலாக விண்ணில் செலுத்துவது, சர்வதேச அளவில் மூன்றாவது இணைய நுழைவாயிலை பிஎஸ்என்எல்-உடன் இணைந்து அமைப்பது ஆகியனவற்றில் இந்தியா உறுதுணையாக இருக்கும், எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பூட்டான் பிரதமர் ஷெரிங், "ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியதில் மகிழ்ச்சி. தாங்கள் (மோடி) முதல் திட்டத்தின் துவக்கத்தின் போது பூட்டான் வந்திருந்தீர்கள். இப்போது இரண்டாம் கட்டமும் தொடங்கப்பட்டுள்ளதால் இருநாட்டு மக்களும் பயனடைவர்.
கரோனா பெருந்தொற்று எதிர்கொள்வதில் இந்தியா திறம்பட செயல்படுவதற்கு எனது பாராட்டை உரித்தாக்குகிரேன். கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா காட்டும் முயற்சி வளரும் நாடுகளுக்கு வரப்பிரசாதம்.
கரோனா தடுப்பூசி மருத்துவப் பயன்பாட்டுக்காக சந்தைக்கு வரும்போது அதை பூட்டானுக்கும் அளிப்பதாக தாங்கள் உறுதியளித்துள்ளமைக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.
முன்னதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ரூபே அட்டைகள் பூட்டானில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் பூட்டான் முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்கள் மற்றும் விற்பனை முனையங்களை இந்தியாவில் இருந்து பூட்டானுக்கு செல்பவர்கள் பயன்படுத்த முடியும்.
இத்திட்டத்தின் இராண்டாம் கட்டம் தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ளதன் மூலம் பூட்டானில் இருந்து இந்தியா வருபவர்கள் இங்குள்ள ரூபே மையங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.